முன்னாள் முதல்வர் குடும்பத்தினரை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக முன்னாள் அமைச்சர் உருவபொம்மை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Share

சித்தூர் : சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சியினர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு குடும்பத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் உருவ பொம்மை எரித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். சித்தூர் காந்தி சிலை அருகே தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது: ஆளும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் கோடாலி நானி நேற்று முன் தினம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவருடைய மனைவி, மகன் நாரா லோகேஷ் ஆகியோரை தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அமைச்சர் பதவியை அனுபவித்த கோடாலி நானி முன்னாள் முதல்வர் குடும்பத்தினரை விமர்சனம் செய்ததை தெலுங்கு தேச கட்சி சார்பில் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கோடாலி நானி மூன்று வருடம் அமைச்சர் பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டார். மணல் கொள்ளை, ஏழை எளிய மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது என பல்வேறு ஊழல் செய்தார்.

இதனால் அவரை முதல்வர் ஜெகன் மோகன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். தற்போது அவர் எங்கள் தலைவரை ஊழல் செய்ததாகவும், பல கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாகவும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் தலைவர் 14 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார். அவருடைய ஆட்சியில் ஒரு ரூபாய் கூட ஊழலில் ஈடுபடவில்லை.

இதுவரை அவர் மீது ஒரு ஊழல் வழக்குக்  கூட பதிவு செய்யவில்லை. முதல்வர் ெஜகன்மோகன் ஆந்திர மாநில மக்களிடம் ஒருமுறை எனக்கு வாக்களியுங்கள், நான் செய்கிறேன் என தெரிவித்ததால் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். தற்போது ஆந்திர மாநில மக்கள் எதற்காக ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு வாக்களித்தோமோ என எண்ணி வேதனை அடைந்து வருகிறார்கள். அவருடைய ஆட்சியில் ஏழை எளிய மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, மணல் கொள்ளையில் ஈடுபடுவது, செம்மரக்கட்டை கடத்துவது, கஞ்சா விற்பனை செய்வது, போதை பொருட்கள் கடத்துவது உள்ளிட்ட செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  

வரும் தேர்தலில் தெலுங்கு தேச கட்சி மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராக சந்திரபாபு பதவியேற்பார். அவர் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் ஊழலில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள். முதலமைச்சர் வரை யாரையும் அவர் விடமாட்டார். ஆகவே எங்கள் தலைவரை விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தலைவரிடம் கோடாலி நானி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் தெலுங்கு தேச கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். இதில் தெலுங்கு தேச கட்சி முன்னாள் கார்ப்பரேட்டர்கள், தலைவர்கள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோடாலி நானி உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com