வரலாற்றில் காணாத பொருளாதார நெருக்கடியால் பேரழிவை நோக்கி நாடு நகர்கிறது: நடைபயண பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு

Share

நாகர்கோவில்: இந்திய தேச ஒற்றுமை நடைபயணத்தின் தொடக்கமாக கன்னியாகுமரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில்  ராகுல்காந்தி பேசியதாவது: இன்று இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.வால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இது அவர்களுக்கான தனிப்பட்ட கொடி என்று நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், அவர்கள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். மதத்தின் மூலம், மொழியின் மூலம் பிளவுப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களால் ஒரு நாளும் தேசத்தை பிளவுப்படுத்த முடியாது. இந்த நாடு ஒரே நாடாக, ஒற்றுமையாக இருக்கும்.

இன்று வரலாற்றில் இல்லாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வேலை இல்லாத திண்டாட்டம் உள்ளது. பேரழிவை நோக்கி தேசம் நகர்கிறது. ஆங்கில ஏகாதிபத்திய நடவடிக்கை தான் தற்போது உள்ளது. இந்தியர்களை மோத விடுங்கள். அவர்களை மோத விட்டு பணத்தை திருடுங்கள் என்று வெள்ளக்கார ஏகாதிபத்திய நடவடிக்கையை மோடி அரசு செய்கிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால் இன்று இந்தியாவின் பொருளாதாரத்தை சில முதலாளிகள் கையில் வைத்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி, வேளாண் சட்டங்கள், பெரும் முதலாளிகளுக்கு உதவுவதற்காகவும், ஏழைகளின் வளமான வாழ்க்கையை திருடவும் பயன்படுகிறது. இன்று சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டு செயல் இழந்த நிலையில் உள்ளது. நாட்டில் உள்ள வேளாண் மக்கள் உயிர் வாழ போராடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் புதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியாத நிலை உள்ளது. நமது இளைஞர்கள் எந்தவிதமான வேலை வாய்ப்பையும் பெற்று சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது. விலைவாசி ஏறுகிறது. எனவே வரலாற்றில் இல்லாத மோசமான கால கட்டத்துக்கு நாம் தள்ளப்பட்டு உள்ளோம்.

எனவே இந்த தருணத்தில் ஒற்றுமையாக இணைய வேண்டும். மக்களை ஒருமுகப்படுத்த வேண்டிய தருணம் வந்து இருக்கிறது. அது தான் நான் ஏற்றுக் கொண்டுள்ள நெடும் பயணத்தின் நோக்கம். இந்த பயணத்தின் மூலமாக மக்கள் நினைப்பதை, ஆசைப்படுவதை என்னால் கேட்க முடியும். இந்த நாட்டின் மக்களின் ஏக்கங்களை, ஆசைகளை பா.ஜ. போல, ஆர்.எஸ்.எஸ். போல நாம் நசுக்கவில்லை. இந்திய மக்களின் ஞானத்தை கேட்க விரும்புகிறேன். மீண்டும் ஒருமுறை உங்களை பார்ப்பது பெருமையாக இருக்கிறது. அற்புதமான இந்த மாநிலத்துக்கு வந்து மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறேன். வரும் நாட்களில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை பெறுவேன். இந்த கொடியை வணங்குவது முக்கியமல்ல. இதன் தத்துவத்தை, கொள்கையை நாம் காப்பாற்ற வேண்டும் என்பது தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேந்தர்சிங் பாகல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், டி.கே.சிவகுமார், கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான், அம்பிகா சோனி, கமல்நாத், சச்சின்பைலட், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, யாத்திரை தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமார், தமிழ்நாடு சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, ரமேஷ்சென்னித்தலா, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விஜய்வசந்த் எம்பி நன்றி கூறினார்.

* சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
ராகுல் காந்தி பேசும்போது, இந்த உரையை தொடங்குவதற்கு முன் எனது பயணத்தை வாழ்த்தி, மகிழ்வித்த சகோதரர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

* விசாரணை அமைப்பை வைத்து அச்சுறுத்த முடியாது
ராகுல் காந்தி பேசுகையில், இந்த நாட்டில் இருக்கிற எதிர்க்கட்சிகளை சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை வைத்து அச்சுறுத்த எண்ணுகிறார்கள். அவர்களுக்கு இந்தியர்களை புரிந்து கொள்ள முடிய வில்லை. இந்திய மக்கள் பயப்பட மாட்டார்கள். எத்தனை மணி நேரம் உள்ளே அழைத்து விசாரணைக்கு அழைத்து கேள்வி கேட்கிறார்கள் என்பதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எதிர்கட்சி தலைவர்களை முடக்க முடியாது. பயமுறுத்த முடியாது என்றார்.

* தொழிலதிபர்களின் கையில் பொருளாதாரம்
ராகுல் காந்தி பேசுகையில், பா.ஜ. அரசு திட்டமிட்டு விவசாயிகளை, கூலி தொழிலாளிகளை, ஏழைகளை நசுக்கி  வருகிறது. சில குறிப்பிட்ட தொழிலதிபர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தை  கையில் வைத்து இருக்கிறார்கள். துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்  தயாரிப்பது உள்பட அத்தனை தொழில்களும் சில தொழிலதிபர்களின் கையில் சிக்கி உள்ளது. அவர்கள் இல்லாமல் நமது பிரதமரால் அரசியல் ரீதியாக ஒருநாள் கூட உயிர் வாழ முடியாது. அந்த தொழிலதிபர்கள் இந்த நாட்டின் ஊடகத்தை கையில் வைத்துக் கொண்டு 24 மணி நேரமும் பிரதமர் படம் இருப்பதை பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய கொள்கைகளையும், திட்டங்களையும் அமல்படுத்துவதை பிரதமர் வாடிக்கையாக வைத்துள்ளார். பணம் மதிப்பிழப்பு, குறைபாடுடன் கூடிய ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள் எல்லாம் சில தொழிலதிபர்களின் பணத்தை பாதுகாக்க செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும் என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com