சென்னை: போக்குவரத்துக்கழக வருவாயை அதிகரிக்க நடத்துனருக்கு இலக்கு நிர்ணயிப்பதா என்று அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, ஒவ்வொரு பேருந்தின் மூலமும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் (ஷிஃப்ட்) ஒரு குறிப்பிட்ட தொகையை வருவாயாக ஈட்ட வேண்டும் என்று போக்குவரத்துக் கழகங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அந்த சுமையை நடத்துனர்கள் மீது திணிப்பது போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
மாறாக, கூடுதல் செலவுகளின் பெரும்பகுதியை ஈடுகட்டுவதற்கான தொகையை நடத்துனர்கள் தான் பயணச் சீட்டு விற்பனை மூலம் ஈட்டித் தர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஒரு பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பது, அந்த பேருந்து பயணிக்கும் தடம், பயணிக்கும் நாள், பயணிக்கும் நேரம், அன்றைய நாளில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் ஆகியவற்றை பொருத்தது தான்; இதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் பங்கு ஏதுமில்லை.
இல்லாத பயணிகளை ஒட்டுனர்களும், நடத்துனர்களும் தேடிக் கண்டுபிடித்து பயணிக்கச் செய்ய முடியாது. எனவே, நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு பேருந்தும் ஒவ்வொரு சுற்றுமுறைக்கும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிப்பதை போக்குவரத்து கழகங்கள் கைவிட வேண்டும். அதன் மூலம் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நிம்மதியாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.