திருவாரூர்: இந்தியா உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என பாஜக கதை விடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து திருவாரூரில் அவர் அளித்த பேட்டி: பிரிட்டனை தாண்டி 5வது வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா மாறப்போகிறது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்தியா ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஒரு நாடு வளர்கிறது என்றால் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். அந்நிய செலாவணி மிச்சமாக வேண்டும். இந்தியா உலகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என பாஜக கதை விடுகிறது. இந்தியா ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதே உண்மையாகும்.மோடி என்பது ஒருவழி பாதை. அவர் பேசுவது மட்டுமே உலகம் கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவதை அவர் கேட்க மாட்டார்.இலவசங்களை குறைத்து கார்ப்பரேட்டுகளை கொழிக்க வைக்கும் ஒன்றிய அரசு, சாதாரண மக்களுக்கு எதுவும் தரக்கூடாது என்கிறது. இதுகுறித்து கேட்டால் அண்ணாமலைக்கு கோபம் வருகிறது. அரசியல் முதிர்ச்சி இல்லாமல் தமிழக நிதியமைச்சரை விமர்சிப்பது அநாகரிகம். அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. நாட்டு மக்களுக்கு இலவசங்கள் தேவைப்படுகிறது. இந்த திட்டங்கள் பறிபோனால் பட்டினி சாவு நிலை ஏற்படும். பட்டினி சாவுகளை தடுக்க இலவசங்கள் தேவையென வலியுறுத்தும் தமிழக நிதியமைச்சருக்கு எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நாவடக்கம் தேவை; அரசியல் முதிர்ச்சியற்ற அண்ணாமலை: பாலகிருஷ்ணன் தாக்கு
Share
