தஞ்சாவூர்: நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி தப்ப முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.
தஞ்சாவூரில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி:
இந்தியாவில் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அமமுக ஒரு அணிலை போல் செயல்படுவோம். பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சில துரோகிகள், துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் தான் இவர்கள் சிந்தனை நிறைவேறும் என்றார். அதிமுக, அமமுக இணையும் போது ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என நினைப்பீர்களா அல்லது இரட்டை தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அமமுக, அதிமுக இணைவது பற்றி அப்புறம் பார்ப்போம். செய் நன்றி, நம்பிக்கை துரோகம் அருவெறுக்கத்தக்க ஒரு குணாதிசயம். எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம் செய் நன்றி மறந்தவர்களுக்கு தண்டனை உண்டு.
இலக்குகளோடு பயணிக்கும் இந்த உலகத்தில் பதவிகாக பயணிக்க நினைக்கும் ஒரே தலைவன் எடப்பாடிதான். நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் பழனிசாமி தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று டிடிவி.தினகரன் பதிலளித்தார்.