Doctor Vikatan: காலை உணவைத் தவிர்ப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா? காலையில் சாப்பிடத் தோன்றாதவர்கள், கட்டாயப்படுத்தியாவது காலை உணவுப்பழக்கத்தைத் தொடரத்தான் வேண்டுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷனிஸ்ட் மற்றும் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
காலை உணவைத் தவிர்க்கலாமா, கூடாதா என்ற கேள்வி, பல காலமாக, பலருக்கும் இருப்பதுதான். சில குடும்பங்களில் காலை உணவைத் தவிர்த்துவிட்டு, காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலான நேரத்தில் முழுமையான உணவை சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. அதையடுத்து மதியத்துக்கும் மாலைக்குமான இடைவெளியில் சூடாக காபியோ, டீயோ குடிப்பார்கள் அவர்கள். இரவு உணவையும் சற்று முன்னதாகவே முடித்துக் கொள்வார்கள்.
காலங்காலமாக அப்படியே பழகியவர்களுக்கு அது இயல்பானதாக மாறியிருக்கும். அவர்களது உடலும் அதை ஏற்றுக்கொண்டு பழகியிருக்கும். அவர்களுக்கு காலை உணவைத் தவிர்ப்பதால் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டிருக்காது.
இன்னும் சிலருக்கு மதிய உணவு வரை பசியே எடுக்காது. அவர்கள் இடையில் எதையும் சாப்பிடாமல் நேரடியாக மதிய உணவை எடுத்துக்கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை மதிய உணவுக்குத் தான் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். காலை உணவோ, இரவு உணவோ ஒரு பொருட்டாக இருக்காது. அப்படிப் பழகியவர்களுக்கும் அது ஓகேதான்.