துருக்கி நாட்டின் பிங்கோல் பகுதியில் உள்ள காந்தார் கிராமத்தில் 2 வயதுச் சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டின் பின்புறத்தில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமி அந்த இடத்தில் சுற்றித் திறிந்த பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். பாம்போடு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை எதிர்பாராத விதமாக, அந்தப் பாம்பு உதட்டுப் பகுதியில் கடித்துள்ளது. பதிலுக்கு கோபத்தில் அந்தச் சிறுமியும், பாம்பைப் பற்றிய பயம் அறியாத குழந்தையாக, அந்தப் பாம்பைக் கடித்துள்ளார். அதன் பிறகு, அழுகுரலோடு கூச்சலிட்டுள்ளார்.
சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமி இருந்த நிலையைக் கண்டு அதிர்ந்துள்ளனர். வாயில் 20 இன்ச் அளவுள்ள பாம்பை, புதிதாக முளைத்த பற்களைக் கொண்டு கடித்துக்கொண்டிருந்துள்ளார். சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், பாம்பு சிறுமி கடித்ததால் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அதன் பின், சிறுமியின் குடும்பத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதோடு, அருகில் இருந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.