2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் கோத்ராவில் கர்ப்பிணி பில்கிஸ் பானோ என்பவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அவர் குடும்பத்தினர் 7 பேர் கொலைசெய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 2004-ம் ஆண்டு இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 11 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர், ஜனவரி 21, 2008 அன்று மும்பையில் உள்ள சிறப்பு மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) நீதிமன்றம், 11 குற்றவாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது. அதையடுத்து, 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் ஏழு பேரை விடுதலை செய்யக்கோரிய மனுவையும் மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்தது.
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432,433-ன் கீழ் தண்டனையை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
தன்னை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்த குற்றவாளியின் தண்டனையை ரத்து செய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு, குஜராத் அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவராக பஞ்சமஹால் மாவட்ட கலெக்டர் சுஜல் மயாத்ரா நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய அவர், “சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தக் குழு, கோத்ராவில் 5 மாத கர்ப்பிணியாக இருந்த பல்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவர் குடும்பத்தார் 7 பேர் கொலைசெய்யப்பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளின் விடுதலைக்கு ஆதரவாக ஒருமனதாக முடிவெடுத்தது. அந்த பரிந்துரை மாநில அரசுக்கும் அனுப்பப்பட்டது” எனத் தெரிவித்தார்.