ரத்த அழுத்தத்தை, அதற்கான கருவியை வைத்து வீட்டிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். எந்த நேரம் வேண்டுமானாலும் டெஸ்ட் செய்து பார்க்கலாம். ஆனால் பிபி செக் செய்வதற்கு முன் சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேலைகள் செய்துவிட்டோ, உடற்பயிற்சிகள் செய்துவிட்டோ உடனே ரத்த அழுத்தத்தை சரிபார்க்கக்கூடாது.
அதேபோல காபி குடிப்பதற்கு முன், சாப்பிடுவதற்கு முன்தான் ரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் உணவிலுள்ள உப்பும், காபியில் உள்ள கஃபைனும் செயற்கையாக ரத்த அழுத்தத்தை அதிகரித்துக் காட்டலாம். Ambulatory blood pressure monitoring முறையிலும் இதை செக் செய்யலாம். அதாவது பிரத்யேக கருவியை சம்பந்தப்பட்ட நபரின் உடலில் பொருத்திவிட்டு, வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். 24 முதல் 48 மணி நேரம் வரை அந்தக் கருவி அவர்களது ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும்.
இந்த முறையில், இரவு நேரத்தில் ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுதல்களையும் கண்காணிக்க முடியும். சிலருக்கு ஒன்றிரண்டு ரீடிங்கிலேயே உயர் ரத்த அழுத்தத்தை உறுதிசெய்வதும் உண்டு. இது மிக அதிக அளவு ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும். அவர்கள் விஷயத்தில் காத்திருந்து மறுபடியெல்லாம் செக் செய்து கொண்டிருக்கத் தேவையிருக்காது.
ஸ்ட்ரெஸ், சரியாகத் தூங்காதது என பல காரணங்களால் செயற்கையாக ரத்த அழுத்தம் உயரலாம். அதனால்தான் பெரும்பாலும் மருத்துவர்கள் ஒரே ஒரு ரீடிங்கில் உயர் ரத்த அழுத்தத்தை உறுதி செய்யாமல், சிலமுறை தொடர்ந்து செக் செய்ய வலியுறுத்துவார்கள்.