
பட மூலாதாரம், SYLENDRA BABU FACEBOOK
(இந்தியா, இலங்கையில் இன்று (20.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் )
காவல்துறையினா் தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் என்ற ‘ஸ்டிக்கா்’ ஒட்டக் கூடாது என தமிழக காவல்துறையினா் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்த விவரம்: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் கருப்பு ‘ஸ்டிக்கா்களை’ நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதில், காவல் துறை உயா் அதிகாரிகள் பயன்படுத்தும் அலுவலக வாகனங்களிலும் கருப்பு ஸ்டிக்கா் பயன்படுத்தக் கூடாது. போலீஸ் என்ற பலகை மற்றும் ‘ஸ்டிக்கரை’ சொந்த வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள காவல்துறை உயா் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது. காவலா்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற பலகை மற்றும் ஸ்டிக்கரை காட்சிப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா்.
அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாகனங்களில் மட்டுமே ‘போலீஸ் என்ற பலகை மற்றும் ஸ்டிக்கா்’ பயன்படுத்த வேண்டும் என அவா் அதில் அறிவுறுத்தியுள்ளாா். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்துறை ஆணையா்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் தங்கள் கீழ் பணி புரியும் காவலா்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் பலகை அல்லது ‘ஸ்டிக்கா்’ பயன்படுத்தி வந்தால் உடனடியாக அதை அகற்ற அறிவுறுத்த வேண்டும். இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்றுவதோடு, உத்தரவை பின்பற்றியது தொடா்பான அறிக்கையை தனக்கு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் டிஜிபி சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளாா் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதிமுக அலுவலகம் சீல் வைப்பு வழக்கு: இன்று தீர்ப்பு
அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவின் இரண்டு தரப்பும் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ந்தேதி வானகரத்தில் நடந்தது. அதேநேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். இதனால், அப்பகுதியே போர் களம் போல் காட்சி அளித்தது. இதையடுத்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் தனித்தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதி என்.சதீஷ்குமார் கடந்த வாரம் விசாரித்தார். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு பிறப்பிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வங்கிக் கணக்கு: திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுமதி
பட மூலாதாரம், Dindigul C Srinivasan
அதிமுகவின் வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க திண்டுக்கல் சீனிவாசனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்தனர். அத்துடன், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கியதுடன், கட்சியின் பொருளாளராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனையும் நியமித்தனர்.
இதையடுத்து அன்றே அதிமுகவின் கணக்குகள் உள்ள, கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளைக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தில், “ஜூலை 11-ம்தேதி சட்ட விரோதமாக பொதுக்குழுநடத்தப்பட்டு, அதில் திண்டுக்கல் சீனிவாசனை அதிமுக பொருளாளராக நியமித்துள்ளனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் நான்தான் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களிலும், உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் அடிப்படையிலும் உள்ளேன். எனவே, திண்டுக்கல் சீனிவாசன் அல்லது வேறு யாரையும் கட்சியின் கணக்குகளை இயக்க அனுமதிக்க வேண்டாம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்துள்ளது குறித்த தகவலை கடிதம் மூலம் வங்கிக்கு தெரியப்படுத்தினார். இந்நிலையில், அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்க திண்டுக்கல் சி.சீனிவாசனுக்கு வங்கி அனுமதித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கேட்டபோது, “இடைக்கால பொதுச்செயலாளர் தரப்பில் நியமனக் கடிதத்துடன், அதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டதால், அதை ஏற்று வங்கி அனுமதித்துள்ளது” என தெரிவித்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விவசாயமும் கால்நடைகள் வளர்ப்பும் – புதுச்சேரி சிறைச்சாலைக்குள் அசத்தும் தண்டனை கைதிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :