வரும் நவம்பர் 15ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுமென ஐ.நா சபை தெரிவித்துள்ளது. இது, வெறும் தகவல் மட்டுமல்ல… ஒரு வகையில் எச்சரிக்கை அறிவிப்பும் கூட. இந்தியாவை பொறுத்தவரை தற்போதைய மக்கள் தொகை 141 கோடியை தாண்டி உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 200 கோடியை எட்டுமென கருதப்படுகிறது. இந்தியாவில் தீவிர வறுமையில் சுமார் 73 கோடி பேர் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, மொத்த மக்கள்தொகையில் 45 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வறுமையில் வாடி வருகின்றனர். வறுமை தீவிரமடைந்துள்ள நாடுகளின் பட்டியலில், நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக இந்தியாவும் இருப்பது வருந்தத்தக்கது. இதெல்லாம் விட, பிரதம மந்திரி ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தில் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என பிரதமர் மோடி, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட தெரிவித்திருந்தனர். கொரோனா 2 ஆண்டு பாதிப்பில் இந்தியாவில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பலர் வேலைவாய்ப்பிழந்தனர். இன்னும் கூட பெரும்பாலான மக்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத சூழல் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி உயர்வானது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும். இதன்மூலம் ஒரு கிலோவுக்கு ரூ3 முதல் ரூ5 வரை அரிசி விலை உயரும். 5 பேர் உள்ள குடும்பத்தில் சராசரியாக 30 – 40 கிலோ வரை அரிசி பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். அந்த குடும்பத்திற்கு மாதம் ரூ120 முதல் ரூ150 வரை கூடுதல் செலவாகும். மொத்த விற்பனையாளர், சில்லரை விற்பனையாளர்கள் என இருதரப்புக்குமே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை கருத்தில்கொண்டுதான் தமிழகம் முழுவதும் அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டியை நீக்க வலியுறுத்தி, சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
அதாவது, பதிவு செய்யப்பட்ட பிராண்டட் அரிசி என்ற நிலை மாறி, பண்டல் செய்யப்பட்ட அரிசி அனைத்துக்கும் ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டுள்ளதுதான் எதிர்ப்புக்கு மிக முக்கிய காரணம். அன்றாட வாழ்வில் ஆடம்பரமாக வாழ்வதை விட, மூன்று வேளை முழுமையான உணவு கிடைப்பதே அரிதாக இருக்கும் மக்களை அதிகம் கொண்ட ஒரு சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் மக்கள் தொகையும், வறுமைக்கோட்டின் கீழ் சிக்கித் தவிப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் பொதுமக்களின் மிக அத்தியாவசிய, அடிப்படையான பொருளான அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு கட்டாயம் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகளோடு, மக்களும் வீதிக்கு வந்து போராட வேண்டிய கட்டாய சூழல் ஏற்படும். ஏழைகளின் சிரமத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு அரிசிக்கான ஜிஎஸ்டியை திரும்பப் பெறுமா?