கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில், உணவுத் திருவிழா நடைபெற்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்பு மிக்க உணவு வகைகள் சமைத்து கண்காட்சி நடத்தப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பேசுகையில், “குமரி மாவட்டத்தின் சிறப்புமிக்க உணவுகளாக நேந்திரம் சிப்ஸ் மற்றும் மட்டிப்பழத்தைச் சொல்லுவார்கள். மட்டிப்பழத்தை ஓர் அறையில் வைத்தால் வீடு முழுவதும் அதன் வாசனை வீசும். உணவில் எப்படி கலப்படம் நடக்கிறது என்பதை பற்றி இந்தக் கண்காட்சியில் தெரிந்துகொண்டேன்’’ என்றவர், “நாகர்கோவில் மாநகரத்தில் ரோட்டோரத்தில் ஆடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதையும், ஹோட்டல்களின் வெளியே பரோட்டா தயாரித்து விற்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசுகையில், “அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு உள்ள உணவுகளை இனம் கண்டு, அளவாகச் சாப்பிடுங்கள். அனைவரும் சரிவிகித உணவை வீட்டில் சமைத்து உண்ண வேண்டும்” என்றார். தொடர்ந்து, உணவுத் திருவிழாவை தொடக்கி வைத்த தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மனோதங்கராஜ் பேசினார்.