சென்னை: மக்களின் அன்பாலும், மருத்துவர்களின் கனிவாலும் நலமுடன் மக்கள் பணிகளை தொடர இருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நலன் விசாரித்தனர். பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது. எடுத்துக்காட்டாக, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் இருக்கும் பெரியசோரகையிலிருந்து தங்கராஜ் என்பவர் எழுதிய கடிதத்தில், ‘‘எங்களின் சக்திவாய்ந்த திராவிட மாடல் முதலமைச்சரை எந்தச் சக்தியும் நெருங்காது’’எனக் குறிப்பிட்டு, மிகுதியான அன்போடு, தனக்குத் தெரிந்த கை வைத்திய முறைகளையெல்லாம் குறிப்பிட்டு அனுப்பியிருந்தது நெகிழ வைத்தது. மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாக நலமடைந்திருக்கிறேன் என்று தங்கராஜிக்கு அதே அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. மருத்துவர் மோகன் காமேஸ்வரன், மருத்துவர் அரவிந்தன், மருத்துவர் எழிலன் எம்.எல்.ஏ., மருத்துவர் தீரஜ் என இந்த நான்கு மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் என்னை தினமும் நல்ல முறையில் கவனித்து, விரைந்து நலம் பெற உதவினார்கள். அவர்களுக்கும் அவர்களுடன் துணைநின்ற மருத்துவக் குழுவினருக்கும் இந்தக் கடிதத்தின் வாயிலாகவும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன். திங்கட்கிழமையன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன். தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்து வருகிறோம்.
திருச்சியில் 2140 பேர் கலந்துகொண்ட செஸ் போட்டி உலக சாதனை புரிந்திருக்கிறது. இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி சூலை 28ம் தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க இருக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். ‘வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக’ என ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையான உடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்து, நாட்டு நடப்பைக் கவனிப்பதுபோலவே திமுக என்ற ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கட்சி பணிகளையும் மருத்துவமனையிலிருந்தபடியே கவனித்து வந்தேன். கழக அமைப்புத் தேர்தல்கள் ஒன்றிய அளவில் முடிவுற்று, முழுமையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நடத்தி முடித்து, நமக்கான லட்சியப் பாதையில் பயணித்து, மக்களுக்கான பணியினைக் கழகத்தினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள்.
* இன்று டிஸ்சார்ஜ்
காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்த் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் நாளையுடன்(இன்றுடன்) நிறைவடைகிறது. இதனால், நாளை(இன்று) மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அடுத்த ஒரு வாரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். இன்று குடியரசு தலைவருக்கான தேர்தல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று வாக்களிக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.