பாராசிட்டமால் என்கிற மருந்தியல் பெயர் நமக்கு மிகவும் பரிச்சயமானது. சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது.
இந்த கொரோனா காலத்தில் பாராசிட்டமாலின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. கீழே விழுந்து அடிபட்ட காயத்துக்குக்கூட மருத்துவர்களால் பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமால் மாத்திரை, சர்வரோக நிவாரணியா? மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது சரியா… எனப் பொது மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.
“காய்ச்சல் மற்றும் தலைவலிக்குதான் முக்கியமாக பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படும். காய்ச்சல் வந்த உடனேயே பாராசிட்டமால் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. உடலின் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டிவிட்டால் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால், காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அதை உடனே குணப்படுத்த முனைவது நல்லதல்ல.