பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், பிரவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தெற்காசியாவில் கடந்த சில ஆண்டுகளில் பரவலாக எதிரொலித்த ஒரு சொல் என்றால், அது ஜென் ஸி (Gen Z) என்பதுதான்.
இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்திய தலைமுறை ‘ஜென் ஸி’ ஆகும்.
கடந்த இரண்டு மாதங்களாக, இந்திய அரசியலிலும் இதுவொரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் ஜென் ஸி இளைஞர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் தொடங்கிய இந்த இயக்கம், ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியது. காக்ரோச் ஜனதா கட்சி இந்த இயக்கத்தை முன்னின்று நடத்தியதால், ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் இதிலிருந்து விலகியே இருந்தன.
ஆனால் கடந்த ஒரு வாரத்தில், இந்த இயக்கம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததால், பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது சர்வதேச ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக, மோதி அரசு தனது பலமாக ஒரு விஷயத்தை முன்வைத்து வந்தது; அதாவது, “எங்கள் அரசில் பதவி விலகல்கள் எதுவும் இல்லை” என்று அதன் பல அமைச்சர்கள் கூறி வந்தனர்.
ஆனால், மோதி அரசின் இந்த முக்கிய அடையாளத்தை ஜென் ஸி இயக்கம் தகர்த்தெறிந்தது. இந்த இயக்கத்தின் முக்கிய கோரிக்கைகளை மோதி அரசு ஏற்றுக்கொண்டது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்தப் பதவி விலகலுடன், காக்ரோச் ஜனதா கட்சி தனது போராட்டத்தை முடித்துக்கொண்டது. ஆனால், ஜென் ஸி இயக்கத்தின் இந்த வெற்றி ஒரு கேள்வியை எழுப்புகிறது: இனி இந்திய அரசியல் எந்த திசையில் செல்லும்? அதில் ஜென் ஸி என்ன பங்காற்றப் போகிறது?
இப்போராட்டத்தைக் கூர்ந்து கவனித்துச் செய்தி வெளியிட்டு வரும் நிபுணர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வாயிலாக, இந்திய அரசியலில் இந்த இயக்கம் எவ்வாறு ஒரு திருப்புமுனையை உருவாக்கியுள்ளது என்பதற்கான விடையைக் கண்டறிய முயன்றுள்ளோம்.
இந்த இயக்கத்தின் தாக்கம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய அரசியலில் எதிரொலிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
‘போக்கை சரிசெய்தல்’
பட மூலாதாரம், Getty Images
கடந்த சில நாட்களாக, ஜென் ஸி (1990-களின் பிற்பகுதி முதல் 2010-களின் முற்பகுதி வரை பிறந்தவர்கள்) தலைமுறையினர் முன்னெடுத்த ஒரு புதிய வகையான போராட்ட முறை குறித்துப் பேசப்பட்டு வருகிறது. ஜூலை 20-ஆம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்வுகள், பல வகைகளில் இந்தியாவில் இதற்கு முன் நடந்த போராட்டங்களிலிருந்து மாறுபட்டிருந்தன.
துணிச்சலான முழக்கங்கள், சுவரொட்டிகள், பாடல்கள், நடனங்கள் மற்றும் வெயில் அல்லது மழையையும் பொருட்படுத்தாமல் உறுதியுடன் போராடும் மனப்பான்மை ஆகியவை இந்தப் போராட்டத்தின் சிறப்பம்சங்களாக இருந்தன. கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் போராட்டத்தைத் தொடர்வது மிகவும் சவாலாக இருந்த சூழலில், டெலிவரி செயலிகளை பயன்படுத்தித் தேவையான பொருட்களைத் திரட்டியது ஒரு புதிய அணுகுமுறையாக அமைந்தது.
இப்போராட்டத்தின் முதல் நாளிலிருந்தே அதைக் கவனித்து வரும் சுயாதீனப் பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா கூறுகையில், “இன்று நிகழ்ந்திருப்பது இந்திய ஜனநாயகத்துக்கு மிக முக்கியமான தருணம்; ஏனெனில், இதில் ஒரு முக்கியமான சீரமைப்பு நிகழ்ந்துள்ளது. அமைதியான போராட்டத்தின் மூலம் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா சாத்தியமாக்கப்பட்ட விதம் இதற்குச் சான்றாகும்,” என்றார்.
“தங்கள் ஆட்சியில் யாரும் ராஜிநாமா செய்வதில்லை என்று பெருமை பேசி வந்த அரசு, அதிகாரச் சமநிலை மற்றும் கண்காணிப்பு இல்லாமல் ஜனநாயகம் சாத்தியமில்லை என்பதை இப்போது புரிந்துகொண்டுள்ளது. இன்று அந்த ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன்; அதன் மீதான மக்களின் நம்பிக்கையும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.”
இந்தியாவின் வழக்கமான சமூகக் கட்டமைப்பிலிருந்து மாறுபட்டு, இந்தப் போராட்டம் ஜென் ஸி தலைமுறையினரை கல்வி என்ற பொதுவான விஷயத்துக்காக ஒன்றிணைத்தது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பல்வேறு தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் எனப் பெருமளவிலானோர் பங்கேற்றனர்.
மூத்த பத்திரிகையாளரும் தேசிய அரசியல் ஆய்வாளருமான விஜய் திரிவேதி கூறுகையில், “இந்தப் போராட்டம் அரசியல், சமூகம், சாதி மற்றும் மதம் சார்ந்த வழக்கமான பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி இது தானாகவே உருவானது. யாரும் அழைப்பு விடுக்காமலேயே, அவர்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,” என்றார்.
“இது அனைத்து அரசியல் கட்சிகளையும் விழிப்படையச் செய்து, அவற்றின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. ஆளும் கட்சிக்கு ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக அமைச்சர் ராஜிநாமா செய்ய நேரிட்டது; அதே சமயம் எதிர்க்கட்சிகள் மீதும் அழுத்தம் ஏற்பட்டதால், ஏறக்குறைய அனைவரும் ஒன்றிணைந்து இப்போராட்டத்துக்கு ஆதரவளித்தனர்.”
அதேவேளையில், மூத்த பத்திரிகையாளர் ஆதேஷ் ராவல் ஒரு முக்கியக் கருத்தை முன்வைக்கிறார்: தர்மேந்திர பிரதான் தானாக முன்வந்து ராஜிநாமா செய்தார் என்று சொல்வதை விட, அவரது ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று சொல்வதே சரியானது என்பது அவர் கருத்து.
அவர் மேலும் கூறுகையில், ‘ஜென் ஸி’ முன்னெடுத்த இந்தப் போராட்டம், அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விவகாரமாக அமைந்தது. ஆரம்பத்தில் இது சாதாரணமாகக் கருதப்பட்டது; ஆனால், அதுவே அரசாங்கத்துக்குப் பாதகமாக முடிந்தது. தர்மேந்திர பிரதான் தானாக ராஜிநாமா செய்யவில்லை; மாணவர்களே அவரை ராஜிநாமா செய்ய வைத்தனர் என்றே நான் இதைப் பார்க்கிறேன்,” என்றார்.
அரசியல் கட்சிகளுக்கான செய்தி என்ன?
பட மூலாதாரம், Ashish Vaishnav/SOPA Images/LightRocket via Getty Images
ஜென் ஸி தலைமுறையினரிடையே மிகவும் பிரபலமான சமூக ஊடகத் தளமாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது என்று கூறலாம். இந்த இயக்கத்தின் மீதான தாக்கமும் இத்தளத்தில் மிக அதிகமாகவே காணப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக, ஜந்தர் மந்தர் தொடர்பான ரீல்ஸ்களால் இன்ஸ்டாகிராம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலான இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்தப் போராட்டம் தொடர்பான ரீல்ஸ்களிலேயே கவனம் செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோதி கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (ஜூலை 23, 24) இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களைப் பதிவிட்டார்.
இந்த இயக்கத்திலிருந்து அரசியல் கட்சிகள் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் குறித்து ஸ்மிதா சர்மா பேசுகையில், “2013-ஆம் ஆண்டில் மோதி பிரதமராவதற்கு முன்பிருந்தே, தங்கள் பிரசாரத்துக்கான கருத்துருவாக்கத்துக்குச் சமூக ஊடகங்களை மிக அதிகமாகப் பயன்படுத்திய ஒரு கட்சியாக பாஜக இருந்து வருகிறது.” என்றார்.
“ஆனால் ஒரு விஷயம் தெளிவாகியுள்ளது: சமூக ஊடகங்களில் நாள் முழுவதும் ஒருதலைப்பட்சமான கருத்துகளையே முன்வைத்துக் கொண்டிருந்தால், ஒரு கட்டத்தில் நிலைமை எல்லை மீறிப் போய்விடும்; அதுதான் இங்கும் நடந்தது.”
ஆதேஷ் ராவல் கூறுகையில், “இந்த இயக்கத்தில், இன்ஸ்டாகிராம் தளத்தில் மோதி அரசை மாணவர்கள் தோற்கடித்தனர். அதாவது, அரசு மாணவர்களைக் கண்டு அஞ்சியது. தினசரி சமூக ஊடகப் பதிவுகளைக் கண்டும்கூட அது அஞ்சியது. ஜென் ஸி தலைமுறையினர் அரசைப் பணிய வைத்தனர்,” என்று குறிப்பிடுகிறார்.
போராட்டம் என்பது சமூக ஊடகங்களை விடவும் களத்தில் நடத்தப்பட வேண்டிய ஒன்று என்ற செய்தி எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளது என்று ஸ்மிதா சர்மா கருதுகிறார்.
ஸ்மிதா சர்மா மேலும் கூறுகையில், “இரண்டாவதாக, மாணவர்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் என்.எஸ்.யு.ஐ (NSUI – காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி) போன்றவை நிச்சயமாகக் களத்தில் இறங்கிப் போராடின என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதில் நிலைத்தன்மை இல்லை. இளம் தலைமுறையினரின் கவனத்தை ஈர்ப்பதிலும், அவர்களின் மனதைக் கவரும் வகையிலும் செயல்படுவதில் ஒரு குறைபாடு இருந்தது.”
அடுத்தது என்ன?
பட மூலாதாரம், Reuters
இருப்பினும், இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தில் ஜென் ஸி தலைமுறையினர் என்ன பங்காற்றப் போகிறார்கள் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
விஜய் திரிவேதி கூறுகையில், “இதுவரை நடந்த தேர்தல்களின் வரலாற்றைப் பார்த்தால், இரண்டு அல்லது மூன்று வகையான வாக்கு வங்கிகள் இருந்ததைக் காணலாம். ஒரு வாக்கு வங்கி என்பது பின்தங்கிய மற்றும் ஏழை மக்களைக் கொண்டதாக இருந்தது. அரசியல் கட்சிகள் அவர்களுக்குப் பல்வேறு பொருட்களையும் மடிக்கணினிகளையும் வழங்கின. பின்னர் இரண்டாவது கட்டம் வந்தது; அதில் அரசியல் கட்சிகள் பெண்களைத் தங்கள் வாக்கு வங்கியாக மாற்றிக்கொண்டன. பாரதிய ஜனதா கட்சி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிற கட்சிகள் இதில் பயனடைந்தன.” என்றார்.
“இப்போது, அடுத்தடுத்த தேர்தல்களுக்கான வாக்கு வங்கியாக இளைஞர்கள் இருப்பார்கள் என்பதை இந்த இயக்கம் வெளிப்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வரும் நாட்களில், அரசியல் கட்சிகளின் திட்டங்கள் இளைஞர்களை மையமாகக் கொண்டதாக அமைவதற்கு வாய்ப்புள்ளது.”
ஆதேஷ் ராவல், ஜென் ஸி இயக்கத்தை இந்திய அரசியலில் ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்கிறார்.
அவர் கூறுகையில், “மோதி அரசாங்கத்தின் மீதான அச்சம் நிலவிய இந்தக் காலகட்டத்தில், கடந்த சில தினங்களில் ஜென் ஸி இளைஞர்கள் அந்த அரசாங்கத்தின் நம்பகத்தன்மையைச் சிதைத்துவிட்டனர். அந்த வகையிலான முழக்கங்களும் மீம்களும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே இவை நடந்தன. எனவே, இது ஒரு புதிய தொடக்கம் என்று நான் கருதுகிறேன்.” என்றார்.
இந்த இயக்கம் ஏதேனும் அரசியல் விளைவை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஸ்மிதா சர்மா கூறுகையில், “இந்த இயக்கத்தின் தேர்தல் முடிவுகள் குறித்து உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாகத் தோன்றும் இளைஞர்கள், எதிர்காலத்தில் ‘அரசியலில் எங்களுக்கு விருப்பமில்லை’ என்று கூறமாட்டார்கள் என்பது மட்டுமே இதிலிருந்து பெறக்கூடிய நம்பிக்கையாகும். ஏனெனில், கொள்கைகள் மாற்றப்பட வேண்டுமென்றால், அரசியலைக் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.” என தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு