பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஜோ க்ளெய்ன்மேன்
- பதவி, தொழில்நுட்பம் மற்றும் ஏஐ ஆசிரியர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது செல்போன் எண்ணை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமலேயே அவர்களுடன் உரையாடும் (Chat) வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
அடுத்த சில மாதங்களில் இந்தத் தளத்தின் முந்நூறு கோடி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் உலகளாவிய ரீதியில் இது பயன்பாட்டிற்குத் தரப்படும் என்று அந்தத் தளம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை முதல் பயனர்கள் செயலி மூலம் ஒரு பெயரை முன்கூட்டியே பதிவு செய்யத் தொடங்க முடியும், இருப்பினும் இது கட்டாயமில்லை.
பயனர்கள் தங்களது பயனர் பெயர்களை எப்போது வேண்டுமானாலும் நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது முழுமையாகச் செயல்படுத்தப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது பயனர் பெயரை (username) மட்டுமே பரிமாறிக்கொண்டு ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியும். தேவையற்ற செய்திகளைத் தடுப்பதற்கும் (block) அல்லது அதுகுறித்துப் புகாரளிப்பதற்கும் (report) இன்னும் விருப்பத்தேர்வுகள் இருக்கும்.
பெயர்கள் 35 எழுத்துகளுக்குள் இருக்கவேண்டும், சில உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் வேறு யாருக்கும் கிடைக்காது என்பதை தவிர சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருக்கும்.
உதாரணமாக, வாட்ஸ்அப்பில் டொனால்ட் டிரம்ப் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பயனர்கள் அதிகமாக இருக்க வாய்ப்பில்லை.
மெட்டா குழுமத்தைச் சொந்தமான இந்த நிறுவனம், பயனர் பெயர்களை ஒரு தனியுரிமை அம்சமாக விவரித்துள்ளது.
பட மூலாதாரம், WhatsApp
வாட்ஸ்அப்பின் தயாரிப்புத் தலைவர் ஆலிஸ் நியூட்டன்-ரெக் கூறுகையில், மற்றவர்களுடன் குறிப்பாகக் குழு உரையாடல்களில் (group chats) தொடர்பில் இருப்பதற்காகப் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்களைப் பகிர விரும்பவில்லை என்று தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
இந்த அம்சம் பயனர்கள் தங்களை இந்தச் செயலியில் “எப்படி காட்டிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தீர்மானிக்க வழிவகை செய்யும்” என்று நம்புவதாக அவர் கூறினார்.
பாதுகாப்பான செய்தி அனுப்பும் செயலியான சிக்னல், இதே போன்ற ஒரு சேவையை 2024-இல் அறிமுகப்படுத்தியது.
“இது ஒரு நல்ல அம்சம். இது கூடுதல் தனியுரிமையை வழங்கினாலும், ஒட்டுமொத்தமாக வாட்ஸ்அப் தனியுரிமைக்கு உகந்த ஒரு செயலி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியரும் ‘பிரைவஸி இஸ் பவர்’ என்ற புத்தகத்தின் ஆசிரியருமான காரிசா வெலிஸ் கூறினார்.
“இது சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காகப் பயனர்களைப் பற்றிய பல மெட்டாடேட்டாக்களை சேகரிக்கிறது.”
“தனியுரிமை என்று வரும்போது மிக மோசமான பின்னணியைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மெட்டாவுக்குச் சொந்தமானதுதான் வாட்ஸ்அப் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”
வாட்ஸ்அப் தனிப்பட்ட அரட்டைகளின் உள்ளடக்கங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்துவதில்லை. அவை எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் (end-to-end-encryption) மூலம் பாதுகாக்கப்படுகின்றன, அதாவது செய்திகளின் உள்ளடக்கங்களை அந்த நிறுவனத்தால் படிக்க முடியாது.
ஆனால் அது நீங்கள் யாருக்குச் செய்தி அனுப்புகிறீர்கள் மற்றும் எப்போது அனுப்புகிறீர்கள் போன்ற தரவுகளை விளம்பரங்களுக்காக பயன்படுத்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்த அம்சம் முழுமையாகக் கொண்டுவரப்பட்டதும், வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் தெரியாது.
பொதுவான பயனர் பெயர் கோப்பகம் (username directory) எதுவும் இருக்காது. முதன்முதலில் ஒரு வாட்ஸ்அப் கணக்கைப் பெறுவதற்குக் கண்டிப்பாகத் தொலைபேசி எண்கள் இன்னும் தேவைப்படும்.
இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது 13 ஆகும்,
இந்திய நிதித் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றின் நிறுவனரான குணால் ஷா இந்தத் தளத்தின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்றும் வில் காத்கார்ட் இந்தத் பதவியில் இருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு விலகுவதாகவும் சமீபத்தில் மெட்டா அறிவித்தது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு