பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், சுபஜோதி கோஷ்
- பதவி, பிபிசி வங்கமொழி சேவை
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்ற சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
அவர் முதலில் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இதற்குப் பிறகு அவர் சீனாவிற்குச் சென்றார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் சந்தித்துப் பேசினார்.
இதற்கு முன்பு, தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை இந்தியாவில் மேற்கொள்வாரா அல்லது சீனா மற்றும் செளதி அரேபியா போன்ற ஏதேனும் ஒரு நாட்டில் மேற்கொள்வாரா என்று பல ஊகங்கள் கிளம்பின. ஆனால் இறுதியில், அவர் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.
இப்பயணத்திற்கு சில நாட்களுக்கு முன்புதான் இந்தியாவின் புதிய தூதர் தினேஷ் திரிவேதி வங்கதேசம் சென்றடைந்தார். அவர் தரைவழியாக எல்லையைக் கடந்து டாக்கா சென்றார்.
வங்கதேசத்தின் புதிய அரசு மற்றும் இந்தியாவுடனான உறவுகள்
பட மூலாதாரம், Tingshu Wang-China Pool/Getty Images
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான சுமார் 55 ஆண்டுகால தூதரக உறவுகளில் முதல்முறையாக, இந்தியா ஒரு அரசியல் நபரை டாக்காவில் தனது பிரதிநிதியாக நியமித்துள்ளது. எனவே இந்த நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.
டாக்கா சென்றடைந்த உடனே, தூதர் தினேஷ் திரிவேதி பூபேன் ஹசாரிகாவின் பிரபலமான பாடல் ஒன்றை மேற்கோள் காட்டினார். அதில் இரு நாடுகளின் “வானமும் ஒன்றுதான், காற்றும் ஒன்றுதான்” என்ற கருத்து விவரிக்கப்பட்டிருந்தது.
அவரது இந்த கருத்து வங்கதேசத்தில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இது “அகண்ட பாரதம்” என்ற சர்ச்சைக்குரிய கருத்தை ஊக்குவிப்பது போல இருப்பதாக பலருக்குத் தோன்றியது.
இதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்தியா மக்களை வலுக்கட்டாயமாக எல்லையைக் கடந்து வங்கதேசத்திற்குள் அனுப்பி வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது. இத்தகைய நடவடிக்கை “புஷ்-பேக்” அல்லது “புஷ்-இன்” என்று அழைக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சமீபத்தில் டெல்லியில் இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்தக் கூட்டத்தில் எந்தவொரு உறுதியான தீர்வும் எட்டப்படவில்லை.
இரு நாடுகளின் உறவுகள் எந்தளவிற்கு மோசமடைந்துள்ளன என்றால், “வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மானின் டெல்லி பயணத்திற்குப் பிறகு உறவுகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவது போல் தோன்றியது. ஆனால் இப்போது அந்த நம்பிக்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. உறவுகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன, மேலும் கடின உழைப்பால் பெறப்பட்ட பலன்கள் ஒவ்வொன்றாக அழிந்து வருகின்றன” என வங்கதேசத்தின் மூத்த தூதரக அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
தனிப்பட்ட உரையாடல்களில், வங்கதேச அதிகாரிகள் இந்த புதிய வீழ்ச்சிக்கு இந்தியாவின் பாஜக ஆளும் இரு மாநில முதலமைச்சர்களின் ஆக்ரோஷமான அணுகுமுறையே காரணம் என்று கருதுகின்றனர். அவர்கள் அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மற்றும் மேற்கு வங்கத்தின் சுவேந்து அதிகாரி.
வங்கதேச குடிமக்கள் என்று கூறப்படுபவர்களை வலுக்கட்டாயமாக எல்லையைக் கடந்து அனுப்புவது குறித்து அவர்கள் பேசிய கருத்துகளுக்கு வங்கதேசம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. வங்கதேசம் இதனைத் தூண்டிவிடும் மற்றும் வன்முறையைத் தூண்டும் செயலாகக் கருதுகிறது.
பாகிஸ்தானுடன் வங்கதேசம் காட்டும் நெருக்கமும் இந்தியாவும்
பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூட உறவுகள் மோசமடையவில்லை என்று கூறவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். சூழ்நிலை மீண்டும் சீர்குலைந்துள்ளதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் இதற்கான முழுப் பொறுப்பையும் அவர்கள் வங்கதேசத்தின் மீதே சுமத்துகிறார்கள். டாக்கா பாகிஸ்தானுடன் தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புவதாகவும், அது ஒரு வகையான “உத்தி ரீதியான உறவை” உருவாக்கி வருகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்திய அதிகாரிகளின்படி, இரு நாடுகளின் உறவுகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கு இதுவே மிக முக்கியக் காரணமாகும்.
ஆகஸ்ட் 5, 2024 அன்று ஷேக் ஹசீனாவின் அரசு வீழ்ந்த பிறகு, வங்கதேசமும் பாகிஸ்தானும் வேகமாக நெருங்கின. இந்த மாற்றம் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் போது தெளிவாகத் தெரிந்தது.
இக்காலகட்டத்தில், பாகிஸ்தானின் பல மூத்த ராணுவ அதிகாரிகள் அடுத்தடுத்து வங்கதேசத்திற்கு சென்றனர். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக பல புதிய முயற்சிகள் தொடங்கப்பட்டன.
தாரிக் ரஹ்மான் தலைமையில் அரசியல் அரசு அமையும் போது, வங்கதேசம் பாகிஸ்தானுடன் காட்டி வரும் நெருக்கத்தைக் குறைக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாக டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அப்படி நடக்காதது இந்தியாவிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது அவர்கள் கூற்று.
இந்த ஏமாற்றம் எந்தளவிற்கு அதிகமாக இருந்தது என்றால், தாரிக் ரஹ்மான் தனது முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு வர வேண்டும் என்று இந்தியா வங்கதேசத்திடம் கோரிக்கை கூட விடுக்கவில்லை.
இதற்குப் பதிலாக இந்தியாவின் அணுகுமுறை மிகவும் மாறுபட்டதாகவே இருந்தது. தாரிக் ரஹ்மான் இந்தியாவிற்கு வருவது அல்லது வராததில் தங்களுக்குப் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை என்பதை அது தெளிவாக உணர்த்தியது.
பட மூலாதாரம், Chief Adviser’s Office, Bangladesh
இருப்பினும், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே காணப்படும் இந்த நெருக்கத்தில், உண்மையான பலம் எந்தளவிற்கு உள்ளது என்ற ஒரு முக்கியமான கேள்வி இன்னும் நீடிக்கிறது. இந்தியா இதனையே இரு நாடுகளின் உறவுகளின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கருதுகிறது.
மேலும், இதில் எவ்வளவு பகுதி வெறும் காட்சிக்கானது என்பதும் கேள்வியாகும். அதாவது, இது ஒரு குறிப்பிட்ட வகையான பிம்பத்தைக் காட்டுவதற்கான முயற்சியா என்பதும் கேள்வியே.
இந்த கட்டுரை இத்தகைய கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயல்கிறது.
பாகிஸ்தானின் செல்வாக்கு உண்மையிலேயே அதிகரிக்கிறதா?
பட மூலாதாரம், Asif HASSAN / AFP via Getty Images
ரீவா கங்குலி தாஸ் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கதேசத்திற்கான இந்தியாவின் தூதராக இருந்தார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த இந்திய தூதரக அதிகாரி ஆவார்.
வங்கதேசத்தில் சமீபகாலமாக இஸ்லாமிய அமைப்புகள் அதிகரித்து வருவது ஒரு பெரிய மாற்றம் என்று அவர் கருதுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய சூழ்நிலை இல்லை என்று அவர் கூறுகிறார்.
“சமீபத்தில் வங்கதேசம் ஆசாத் பார்ட்டி என்ற சிறிய அமைப்பு சில இஸ்லாமிய குழுக்களுடன் இணைந்து டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பெரிய போராட்டத்தை நடத்தியது. இது பாதுகாப்பு குறித்து கடுமையான கவலையை ஏற்படுத்தியது” என்று அவர் தெரிவித்தார்.
“பாகிஸ்தானின் உளவு அமைப்பின் உதவி இல்லாமல் இது போன்ற எதுவும் நடக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஐஎஸ்ஐ தெளிவாக வங்கதேசத்தில் தனது பழைய பிடியை மீண்டும் வலுப்படுத்த முயல்கிறது” என்று அவர் மேலும் கூறினார்.
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் நெருக்கம் குறித்த விவாதத்தில் பெருமளவிற்கு உண்மை இருப்பதாக ரீவா தாஸ் கருதுகிறார். அவரைப் பொறுத்தவரை, இந்தியா கவலைப்படுவதற்குப் போதுமான காரணங்கள் உள்ளன.
பாகிஸ்தானின் மறைமுக ஆதரவுடன் வங்கதேசம் மீண்டும் இஸ்லாமிய சக்திகள் வளரும் இடமாக மாறிவிட்டது என எந்தவொரு தயக்கமும் இன்றி அவர் கூறுகிறார்.
வங்கதேசத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் பயணங்கள் அல்லது அது போன்ற நிகழ்வுகள் குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் எப்போது கேள்வி கேட்கப்பட்டாலும், அதன் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பதிலையே அளித்துள்ளார்.
அவர், “பிராந்தியத்தில் நமது உத்தி ரீதியான நலன்களைப் பாதிக்கும் ஒவ்வொரு நடவடிக்கை மீதும் நாம் கண் வைத்துள்ளோம்” என்றார்.
தனிப்பட்ட உரையாடல்களில், இந்தியாவின் மூத்த அதிகாரிகளும் வங்கதேசத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் தங்களது பார்வையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
முன்னதாக வங்கதேச ராணுவம், நிர்வாகம் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது என்று அவர்கள் கூறுகின்றனர். இப்போது அது எந்த விலையைக் கொடுத்தாவது அந்தச் செல்வாக்கை மீண்டும் பெற விரும்புகிறது.
அதே நேரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் வங்கதேசத்துடன் உறவுகளை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், ராணுவ ஒத்துழைப்பில் குறைவாகவே கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர்.
அவர்களது கருத்துப்படி, கலாச்சார இணைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
“பல்வேறு காரணங்களால் வங்கதேசமும் பாகிஸ்தானும் ராணுவ ஒத்துழைப்பை மிக வேகமாக உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் மதிப்பிடுகிறோம். இந்த உறவிற்கு ஒரு எல்லை உண்டு” என ஓர் அதிகாரி கூறினார்.
“எனவே அவர்கள் கல்வி, கலாசாரம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அவர்கள் புதிய உறவுகளை உருவாக்க முயல்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
உதாரணமாக, வங்கதேசத்தின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சில்ஹெட் நகரில் உள்ள ஷாஜலால் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தான் இரண்டு உதவித்தொகைகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வங்கதேச கல்வி அமைச்சர் பாகிஸ்தான் சென்றிருந்ததாகவும் அவர் கூறினார். அங்கு அவர் பாகிஸ்தானின் உயர்கல்வி முறையைப் பாராட்டியதுடன், வங்கதேச மாணவர்களை அங்கு சென்று படிக்குமாறு ஊக்குவித்தார்.
இதேபோல், டாக்கா மற்றும் கராச்சி இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்திற்கு பயணிகள் மத்தியில் தேவை மிகவும் குறைவாக உள்ளதாக இந்தியா கூறுகிறது. எனவே, இந்த நடவடிக்கை அரசியல் செய்தியை வழங்குவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது என்று அது கருதுகிறது.
‘விடுதலைப் போரின் கொள்கைகள் இன்னும் திரும்பி வரவில்லை’
இந்தியாவின் கொள்கை உருவாக்கத்துடன் தொடர்புடைய பலர் இன்றும் வங்கதேசத்துடனான உறவுகளை 1971 விடுதலைப் போரின் கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்கள்.
அந்த வரலாற்றின் காரணமாக டாக்கா மற்றும் இஸ்லாமாபாத் இடையே இயல்பான மற்றும் உண்மையான நட்பு சாத்தியமில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் டாக்கா சென்றடைந்தபோது, அவர் ஒரு மாறுபட்ட செய்தியை வழங்கினார். இரு நாடுகளின் புதிய தலைமுறையும் ஒரு “பகிரப்பட்ட கனவை” ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.
“கராச்சி முதல் சிட்டகாங் வரை, குவெட்டா முதல் ராஜ்சாஹி வரை, பெஷாவர் முதல் சில்ஹெட் வரை மற்றும் லாகூர் முதல் டாக்கா வரை, நமது இளைஞர்கள் ஒன்றிணைந்து நிற்கவும், ஒவ்வொரு சவாலையும் கூட்டாக எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்” என்று அந்த நேரத்தில் இஷாக் தார் கூறினார். அன்றைய முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸைச் சந்தித்த பிறகு அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
பிஎன்பி அரசு வந்த பிறகு பாகிஸ்தானுடனான நெருக்கம் குறையும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று அது கூறுகிறது.
இந்தியாவின் ஆளும் பாஜகவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் வெளியுறவுக் கொள்கை நிபுணர் சுப்ர கமல் தத்தா கூறுகையில், “பிரதமர் தாரிக் ரஹ்மான் அவரே ஒரு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரரின் மகன் ஆவார். அவர் கொள்கைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார்.
“ஆனால் நூறு நாட்களுக்கும் மேலாகியும் அத்தகைய எந்தவொரு அறிகுறியும் கிடைக்கவில்லை. இடைக்கால அரசைப் போலவே இப்போதும் பாகிஸ்தானின் ஆதரவாளர்களும் இஸ்லாமிய குழுக்களும் அரசியல் மற்றும் பொது வாழ்வில் செல்வாக்குடன் இருக்கிறார்கள்” என்று அவர் மேலும் கூறினார்ச்.
1971 போரின் போது பாகிஸ்தான் ராணுவம் பல பெண்களுக்கு எதிராகப் பயங்கரமான அத்துமீறல்களைச் செய்தது என்றும். அது ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்கவில்லை என்றும் தத்தா மேலும் கூறுகிறார்.
அவரைப் பொறுத்தவரை, வங்கதேச மக்களின் மனதில் உள்ள கோபம் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட முடியாது.
“இதன் காரணமாகவே, பிஎன்பி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்ட முயன்றால், அது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். இறுதியில் பாகிஸ்தான் தனது உண்மையான நண்பன் அல்ல என்பதை பிஎன்பி புரிந்து கொள்ளும், ஆனால் ஒருவேளை அதற்குள் அது பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கலாம்” என அவர் கூறினார்.
வங்கதேசத்தில் பாகிஸ்தானின் இயற்கையான கூட்டாளியாகக் கருதப்படக்கூடிய ஏதேனும் ஓர் அரசியல் சக்தி இருக்குமானால், அது ஜமாத்-இ-இஸ்லாமி தான் என்று பல இந்திய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தற்போது நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.
வங்கதேச அரசியலைக் கவனித்து வரும் முன்னாள் இந்திய தூதர் ஒருவர் கூறுகையில், “பாகிஸ்தான் யாருக்காவது ஆதரவளிக்க விரும்பினால், அது தனது மிகவும் நம்பகமான ஏ அணியைத்தான் ஆதரிக்கும், அது ஏன் பி அணியைத் தேர்ந்தெடுக்கப் போகிறது?” என்றார்.
“பி-அணி இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் பாகிஸ்தானின் சொற்படி நடந்தால், ஒரு நாள் ஜமாத்-இ-இஸ்லாமி, பிஎன்பியை விழுங்கிவிடும்” என அவர் மேலும் கூறினார்.
எனவே, வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாகிஸ்தானின் நிழல் இப்போது ஒரு முக்கியமான யதார்த்தமாக மாறி வருகிறது என்பதில் அதிக சந்தேகம் இல்லை.
இப்போது இந்தியா என்ன செய்ய வேண்டும்?
வங்கதேசத்தின் ராஜதந்திரம், வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு இப்போதும் பெரிய அளவில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், டாக்கா பாகிஸ்தானுக்கு அதிக நெருக்கமாகக் காட்டி புது டெல்லியை ஏன் கோபப்படுத்த விரும்புகிறது? என்ற கேள்வி எழுகிறது.
வங்கதேச அரசின் மூத்த அதிகாரி ஒருவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் கூறுகையில், பாகிஸ்தானை விட இந்தியாவுடன் தனக்கு மிகவும் வலுவான உறவுகள் தேவை என்பதை வங்கதேசமும் ஒப்புக்கொள்கிறது என்றார்.
ஆனால், இந்தியாவின் உள்நாட்டு அரசியலின் கட்டாயங்கள் உறவுகளை வேறு திசையில் கொண்டு செல்வதாக அவர் கூறுகிறார்.
தாரிக் ரஹ்மான் அரசு அமைந்தவுடனே இரு செல்வாக்குமிக்க லெப்டினன்ட் ஜெனரல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்பட்டனர். அவர்கள் முக்கியப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு வெளியுறவு அமைச்சகத்தில் முக்கியத்துவமற்ற பொறுப்புகளுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த இரு அதிகாரிகளும் 2025-இல் பாகிஸ்தான் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிரையும் சந்தித்திருந்தனர்.
“ஆனால் இத்தகைய நடவடிக்கைகளுக்கு நேர்மறையான பதிலளிப்பதற்குப் பதிலாக, ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் சுவேந்து அதிகாரியும் மக்களை வலுக்கட்டாயமாக எல்லையைக் கடந்து அனுப்புவது குறித்துப் பேசுவதை நாங்கள் கண்டோம். இதனால் உறவுகள் மீண்டும் சீர்குலைந்தன” என்றார் அந்த அதிகாரி.
இந்தியாவின் உள்நாட்டு அரசியல் அதன் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பல நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவிற்கு அதிக சாதகங்கள் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
லண்டனைச் சேர்ந்த புவிசார் அரசியல் ஆய்வாளர் பிரியஜித் தேப்சர்க்கார் கூறும்போது, “மேற்கு ஆசிய நெருக்கடியின் போது கூடுதல் எரிசக்தி விநியோகமாக இருக்கட்டும் அல்லது கோவிட் பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசியாக இருக்கட்டும், ஒவ்வொரு முறையும் இந்தியா தான் வங்கதேசத்திற்கு உதவியதே தவிர பாகிஸ்தான் அல்ல. எனவே டாக்கா மற்றும் இஸ்லாமாபாத் இடையே தற்போது நிலவும் நெருக்கம் வியப்பளிப்பதாக உள்ளது” என்றார்.
பாகிஸ்தான் அதுவே பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான சிரமங்களுடன் போராடி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழ்நிலையில், அது வங்கதேசத்திற்கு எவ்வளவு உதவ முடியும்? என்ற கேள்வி எழுகிறது.
அவரைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் தனது முக்கிய கூட்டாளியான சீனாவிடமும் முன்பைப் போல வலுவான செல்வாக்கைக் கொண்டிருக்கவில்லை.
இதன் காரணமாகவே, தூண்டிவிடும் பேச்சுக்களுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்து, வங்கதேசத்திடம் சமநிலையான மற்றும் நட்புறவான கொள்கையை இந்தியா கடைப்பிடித்தால், வங்கதேசம் படிப்படியாக பாகிஸ்தானிடமிருந்து தானாகவே தூர விலகிவிடும் என்று பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டெல்லியின் மனோகர் பரிக்கர் பாதுகாப்பு ஆய்வுக் கழகத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஸ்மிருதி பட்நாயக் கூறுகையில், கோட்பாட்டு ரீதியாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இடையே கலாச்சார, பொருளாதார அல்லது வர்த்தக உறவுகள் அதிகரிப்பதில் இந்தியாவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார்.
இத்தகைய உறவுகள் வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலை நிலைப்படுத்த உதவக்கூடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஆனால், “இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் உத்தி ரீதியான நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று டெல்லி கருதினால், அல்லது இந்த ஒத்துழைப்பு உணர்திறன் மிக்க பகுதிகளுக்கு விரிவடைந்தால், இந்தியா நிச்சயமாக அதனைத் தடுக்க முயலும்,” என அவர் எச்சரிக்கிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு