முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் குட்லெந்திலிருந்து பந்தை எழுப்பி கையை உடைப்பது ஹெல்மெட்டை தாக்குவது, வயிற்றில் கொடுப்பது என்று இந்திய பேட்டர்களை ரொம்பவும் படுத்தி எடுத்து விட்டார், முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் கொஞ்சம் ஒழுங்காக வீசியிருந்தால் அந்த டெஸ்ட்டுமே இந்தியாவுக்கு பிரச்சனைதான், வெறும் பவுலிங்கை மட்டும் வைத்து இந்தியா ஜெயித்து வந்தது, அதற்கும் டீன் எல்கர் 2வது டெஸ்ட் 2வது இன்னிங்சில் இது ஒண்ணுமில்லேடா என்று ஆப்பு வைத்து வெற்றி பெற்றார். இதனையடுத்து தொடர் 1-1 என்று சமநிலை எய்தியுள்ளது.
இதனையடுத்து 3வது டெஸ்ட் போட்டியில் நாங்கதான் வெல்வோம் என்று கூறிய டீன் எல்கர், ரபாடா பற்றிக் கூறும்போது, “நான் ஆட்டத்தின் முதல் நாளன்று ரபாடாவின் பேசினேன். அதுதான் திருப்புமுனை. அவரிடம் சென்று, நம் அணியிலேயே மிகவும் மதிப்புமிக்க வீரராக இருக்கிறீர்கள், இந்த சமயத்தில் நீங்கள் சரியாக வீசவில்லை என்றேன்.
ரபாடாவின் முழுத்திறமை என்ன என்று எனக்குத் தெரியும். ரபாடாவின் பந்துவீச்சில் மட்டும் தீ பற்றிக்கொண்டால், எந்த பேட்ஸ்மேனும் வந்து பேட் செய்ய முடியாது, உங்களைவிட சிறந்த பந்துவீச்சாளர் யாருமில்லை என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் உணர்ந்திருக்கிறேன் என்று தெரிவித்தேன்.
ரபாடாவுடன் நான் பேசிய பேச்சு நல்ல பலன் அளித்தது, அவரும் உற்சாகமடைந்தார், மறுநாள் அவர் களத்தில் செயல்பட்டவிதமும் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு ஓவரையும் வீசிவிட்டு ஓய்வெடுக்க ரபாடா செல்லும்போது, அவர் பந்துவீச்சை ஆய்வுசெய்தார், பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை உணர்ந்தவுடன் அந்த மாற்றமும் ஓய்வறையில் ரபாடாவிடம் தெரிந்தது.
ரபாடா பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய பின்புதான் தென் ஆப்பிரிக்காவுக்கு வழிபிறந்தது. ஓய்வறையிலேயே ரபாடா மிகுந்த உற்சாகமாக இருந்தார், இது களத்தில் நன்றாகத் தெரிந்தது. அந்த மனநிலையுடன் ரபாடா பந்துவீசினார், அவரின் பங்களிப்பும் மிகப்பெரிய அளவில் இருந்தது. ஒரு கேப்டனாக ரபாடாவை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். ரபாடாவின் பந்துவீச்சில் தனித்துவமான ஃபயரைப் பார்த்தது மகிழ்ச்சிதான்.
செவ்வாய்க்கிழமை நடக்கும் இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் மிகப்பெரிய சவாலாக இருக்கும். நாங்கள் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறோம். இந்தத் திட்டங்களுக்கு எங்கள் வீர்ரகள் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பது முக்கியம்.
Also Read: ஆஷஸ் தொடர்: உஸ்மான் கவாஜா பெரிய சாதனை
எங்கள் அணியில் வீரர்கள் பலர் அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், வாண்டரர்ஸ் மைதானத்தில் கிடைத்த வெற்றியால் உற்சாகமாக, நம்பிக்கையாக இருக்கிறார்கள். ஆனாலும், நாங்கள் நினைத்தவாறு பல்வேறு விஷயங்கள் நடக்கவில்லை என்பதும் எங்களுக்குத் தெரியும். பல்வேறு விஷயங்களில் நாங்கள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதை அணிக்குள் மீண்டும் வலியுறுத்துவோம், என்றார் டீன் எல்கர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.