இந்த மருந்துகளின் செயல்திறன் (Efficacy) எப்படியிருக்கும் என்பது இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது இந்த மருந்துகளைப் பயன்படுத்தும்போது உடல் எடை குறையும் விகிதம் எப்படியிருக்கும் என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் ஆர்லிஸ்டாட் மருந்தை எடுக்கும்போது ஒரு வருடத்தில் ஒருவரின் மொத்த உடல் எடையில் 3% முதல் 10% வரை குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, 100 கிலோ எடையுள்ள ஒருவர் இந்த மருந்தைப் பயன்படுத்தினால், ஒரு வருடத்தில் 3 முதல் 10 கிலோ வரை எடை குறையலாம்.
செமாக்ளுடைடு மருந்தை எடுக்கும்போது மொத்த உடல் எடையில் சுமார் 15% முதல் 17% வரையிலும், டிர்செபடைடு மருந்தை எடுக்கும்போது சுமார் 22.5% வரையிலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
உடல் எடை அதிகமுள்ளவர்கள், எப்போதும் குறுக்கு வழிகளை நாடக்கூடாது. எடை அதிகரிப்புக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.

வெறும் மருந்துகள் மட்டுமே உடல் எடையை முழுமையாகக் குறைத்துவிடாது. மருந்துகளுடன் சேர்த்து வாழ்க்கைமுறை மாற்றங்கள் (Lifestyle Modifications) மிக அவசியமானவை. எடையைக் குறைக்க மட்டுமன்றி, அதைத் தக்கவைக்கவும் உடற்பயிற்சி, சரியான உறக்கம் மற்றும் உணவுமுறை மாற்றங்கள் ஆகியவை அடிப்படை. இந்த விஷயங்கள் பின்பற்றப்பட்டால்தான் இந்த மருந்துகளும் சிறப்பாகச் செயல்படும்.
மேற்குறிப்பிட்ட மூன்று மருந்துகளில், ஆர்லிஸ்டாட் என்பது இப்போது பெரிய அளவு உபயோகத்தில் இல்லை. இது செரிக்கப்படாத கொழுப்பை மலம் வழியாக வெளியேற்றுவதன் மூலம் செயல்படுகிறது. இன்று ஆர்லிஸ்டாட்டை விட அதிக பலன்கள் தரும் மருந்துகள் வந்துவிட்டதால், இந்த மருந்தைப் பெரும்பாலான மருத்துவர்களும் பரிந்துரைப்பதில்லை.
உடல் எடைக்குறைப்புக்கான மருந்துகளைக் கண்டது, கேட்டது, மற்றவர்களுக்குப் பலன் தந்ததன் அடிப்படையில் நீங்களாக வாங்கிப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. முறையான மருத்துவ ஆலோசனை பெற்று, உங்கள் உடலை டெஸ்ட் செய்து பார்த்த பிறகு, அவரது பரிந்துரையின் பேரில்தான் எடுக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.