பட மூலாதாரம், Handout
-
- எழுதியவர், ப.சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த முறை வெற்றி தேடித் தந்த அதே கூட்டணியை தக்க வைத்துக்கொள்வதுடன் புதிய கட்சிகளையும் உள்ளே கொண்டுவர திமுக விரும்புவதை அக்கட்சித் தலைவர்கள் தங்களது பேச்சு மூலம் அவ்வப்போது உணர்த்தியுள்ளனர். மறுபுறம் அதிமுகவும் வலுவான கூட்டணியை கட்டமைக்க தீவிரம் காட்டுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக எதிர்வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
தமிழ்நாட்டில் பரவலாக வாக்கு வங்கி இருப்பதால் தேமுதிகவை தங்களது கூட்டணியில் சேர்க்க திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டுவதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பிலுமே தேமுதிக பேசுவதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்து அக்கட்சிகள் என்ன சொல்கின்றன?
தேமுதிக இருமுறை தேதி குறித்தும் கூட, அந்த நாட்களில் கூட்டணி முடிவை அறிவிக்காமல் இருப்பது பற்றி அக்கட்சி நிர்வாகிகள் கூறுவது என்ன?
அதிமுக – தேமுதிக இடையே என்ன சிக்கல்?
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணியில் இடம்பெறுவது என்பதை தேமுதிக இன்னும் உறுதிப்படுத்தாமல் இருக்க மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு தான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது என்று கூறி 2025-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலின்போது அதனை பெற தேமுதிக விரும்பியது.
ஆனால், அப்போது அதிமுகவுக்கு கிடைக்க வாய்ப்பிருந்த இரு மாநிலங்களவை இடங்களுக்கும் அக்கட்சியே வேட்பாளர்களை நிறுத்தியது.
அந்த நேரத்தில் இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி, 2026-ஆம் ஆண்டு மாநிலங்களவை தேர்தலின்போது தேமுதிகவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக தொடர்கிறது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், ஜனவரி மாதம் தேமுதிக கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருக்கிறது. தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பதை கட்சியின் மாநாட்டில் அறிவிப்போம்.” என்றார்.
பட மூலாதாரம், X/Premalatha Vijayakanth
ஆனால், ஜனவரி 9-ஆம் தேதி நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. அதன் பின்னர் பிப்ரவரி மூன்றாம் தேதி கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிப்பதாக கூறிய பிரேமலதா அன்றைய தினமும் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “இந்திய தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக மக்கள் விரும்பும் கூட்டணியை அறிவிப்போம்.” என்று தெரிவித்தார்.
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முடித்து பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தேமுதிகவை கூட்டணியில் இடம்பெறச் செய்ய திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் விரும்பினாலும், தேமுதிக கேட்கும் அளவுக்கு அதிக தொகுதிகளை வழங்க இரு கட்சிகளுமே தயங்குகின்றன” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்,”விஜயகாந்த் மறைவுக்கு பிறகான அனுதாப ஓட்டுகளே தேமுதிகவின் பலம். தேமுதிகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 ஆயிரம், 3 ஆயிரம் வாக்குகள் உள்ளன. நான்கு முனை போட்டிக்கு வாய்ப்புள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் இந்த வாக்குகள் முடிவை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றக்கூடும். அதனால்தான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க விரும்புகின்றன.” என்றார்.
அதிமுக கூறுவது என்ன?

“அதிமுகவோடு தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்பதுதான் தேமுதிக தொண்டர்களின் எண்ணம். அதற்கு ஏற்ற வகையில் நல்ல முடிவை பிரேமலதா எடுப்பார் ” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஏற்கெனவே உறுதியளித்தபடி 2026-ல் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்படும். இனியும் காலம் தாழ்த்தாமல் உரிய நேரத்தில் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான முடிவை தேமுதிக தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
திமுக கூறுவது என்ன?
“தேமுதிக இடதுசாரி கட்சிகளைவிட அதிக இடம் கேட்கிறது” என்கிறார் திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலில் கூட்டணிக்குள் தேமுதிக வர வேண்டும். அனைத்துக் கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பேசிய பிறகுதான் இடப்பங்கீடு முடிவு செய்யப்படும். இறுதி முடிவை தலைமைதான் எடுக்கும். தேமுதிக எங்கள் கூட்டணிக்கு வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அதேநேரத்தில், கூடுதலாக ஒரு கட்சி வந்தால் கூட்டணியின் வலிமை கூடும்,” என்றார்.
பட மூலாதாரம், X/TKS Elangovan
இழுபறி ஏன்? தேதிமுக நிர்வாகி பதில்
சட்டமன்ற தேர்தல் நிலைப்பாட்டை அறிவிப்பதில் இழுபறி நீடிப்பது பற்றி தேமுதிக உயர்மட்டக்குழு உறுப்பினர் இளங்கோவனிடம் பிபிசி தமிழ் பேசியது.
“தொண்டர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தலைமைக்கு உள்ளது. அவசரப்பட்டு முடிவு எடுத்தால் பின்னால் வரும் பிரச்னைகளை தலைமைதான் எதிர்கொள்ள வேண்டும், அதனால் பொதுச் செயலாளர் நிதானமாக முடிவெடுக்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.
“தேமுதிக தொடங்கி 2006, 2009 தேர்தல்களில் தனித்து தேர்தலை எதிர்கொண்டு கூடுதல் வாக்குகளைப் பெற்றோம். கூட்டணி அமைத்த பிறகு குறைந்த இடங்களிலேயே போட்டியிடுவதால் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் குறைந்து வருகிறது. விஜயகாந்த் இல்லாமல் தேமுதிக எதிர்கொள்ள இருக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இது. விஜயகாந்த் மறைவுக்குப் பின் தொண்டர்களிடையே சோர்வு இருப்பது உண்மைதான் அதிலிருந்து இப்போது மீண்டு வந்துகொண்டிருக்கிறார்கள்.” என இளங்கோவன் தெரிவித்தார்.
இழுபறிக்கு காரணம் என்ன?

தேமுதிக முடிவை அறிவிக்காமல் இழுத்தடிப்பது பற்றிய தன்னுடைய அவதானிப்பை விளக்கிய பத்திரிகையாளர் பிரியன், ‘மாநிலங்களவை இடம் வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், அதிக சட்டமன்ற தொகுதிகளை தேமுதிக கேட்கிறது. கடந்த முறை போல வாக்குறுதி கொடுத்து பின் ஏமாற்றிவிடுவார்களோ என்ற அச்சமும் தேமுதிகவுக்கு உள்ளது.” என்றார்.
“அதே நேரத்தில், திமுக கூட்டணியில் இடதுசாரிகளை விட தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் வழங்க திமுக தயங்குகிறது. தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிக ஈடுபடவில்லை. தனித்து போட்டியிட தேமுதிக தீர்மானித்தால் அது தற்கொலைக்கு சமம்.” என்று அவர் கூறினார்.
“தேமுதிக மாவட்ட செயலாளர்கள் திமுகவுடன் கூட்டணி சேர விருப்பம் தெரிவித்தாலும் சுதீஷை மத்திய அமைச்சராக்க பிரேமலதா விரும்புவதே இந்த இழுபறிக்கு காரணம்.” என்று பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்தார்.

தேமுதிகவின் தேர்தல் வரலாறு
- 2005 செப்டம்பர் மாதம் மதுரையில் பிரமாண்ட மாநாட்டில் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த்
- 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக 8.4% வாக்குகளை பெற்றது. விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.
- 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றது தேமுதிக.
- 2011-இல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிக 29 இடங்களில் வெற்றி பெற்றது.
- 2016-இல் மக்கள் நலக் கூட்டணியில் 2.6% வாக்குகளை தேமுதிக பெற்றது.
- 2021-இல் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்து 0.4% வாக்குகளை தேமுதிக பெற்றது.
- 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக 2.6% வாக்குகளை பெற்றிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு