மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா – அமெரிக்கா அணிகள் நேருக்கு நேர் மோதின.
டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனாங்க் படேல், சூழ்நிலையை கணித்து பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அமெரிக்க வேகப்பந்து வீச்சாளர்களின் துல்லியமான பந்து வீச்சுக்கு இந்திய டாப் ஆர்டர் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பினர்.

பவர் பிளே முடிவில் இந்திய அணி கடுமையான அழுத்தத்தில் சிக்க, ஸ்கோர் 77/6 என்ற நிலைக்கு சரிந்தது.
அந்த நெருக்கடியான தருணத்தில் பொறுப்புடன் விளையாடினார் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்.
சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 49 பந்துகளில் 84 ரன்கள் என அபாரமாக விளையாடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். அவரது இன்னிங்ஸின் துணையுடன் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 161/9 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அமெரிக்க அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.