கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இந்திய அணி ஆடிய 5 டெஸ்ட் தொடர்களில் வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் போன்ற சிறிய அணிகளிடம்தான் மட்டும்தான் வெற்றி கிடைத்திருக்கிறது.
கம்பீர் தலைமையில் சொந்த மண்ணில் 8 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 4-ல் தோல்வியடைந்திருக்கிறது.
இந்த எண்ணிக்கையானது, கடந்த மூன்று தலைமைப் பயிற்சியாளர்கள் அனில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி, டிராவிட் ஆகியோர் பயிற்சிக் காலத்தில் இந்திய அணி தோல்வியடைந்த டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கைக்கு சமம்.
தற்போது, நடப்பு தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரை இந்தியா இனி வெல்லவும் வாய்ப்பில்லை. முடிந்தவரை கடைசி டெஸ்ட்டில் வெற்றிபெற்று தொடரை இழக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

கம்பீர் தலைமையிலான பயிற்சியின் கீழ் இந்திய அணியின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் காரணமாக முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் அவர் மீது விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், கம்பீருக்கெதிராக சிலருக்கு தனிப்பட்ட அஜெண்டா இருக்கலாம் என்று கம்பீருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதான்ஷு கோடக், “தோல்விக்கான (தென்னாப்பிரிக்காவுக்கெதிரான முதல் டெஸ்ட்) பொறுப்பை தான் ஏற்பதாக கம்பீர் கூறியிருக்கிறார். ஏனெனில் மைதானப் பொறுப்பாளர்கள் அதற்கு பொறுப்பேற்பதை அவர் விரும்பவில்லை.
மக்கள் கம்பீரைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். பேட்ஸ்மேன்கள் என்ன செய்தார்கள், பேட்டிங் கோச் என்ன செய்திருக்க வேண்டும் என்று யாரும் குறிப்பிடுவதில்லை.
தோற்ற போட்டிகள் அனைத்தும் கம்பீரைப் பற்றியதாக மாறுகிறது. இதில் சிலருக்கு கம்பீர் மீது தனிப்பட்ட அஜெண்டா இருக்கலாம். இது மிகவும் மோசமானது” என்று கூறினார்.