வாரத்துக்கு மூன்று நாள்களாவது உணவில் ஏதேனும் ஒரு கீரை இடம்பெற வேண்டும் என்பது காலங்காலமாக மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயம். ஆனாலும் அவசர உலகத்தில் கீரையை வாங்கிச் சமைக்கும் பொறுமை பெரியவர்களுக்கும் இல்லை.
கீரையின் அருமை, பெருமை சிறியவர்களுக்கும் புரிவதில்லை. கட்டுக்கட்டாக கீரை வாங்கி, ஆய்ந்து, சுத்தப்படுத்தி, சமைப்பது என்பது சிலருக்கு பொறுமையைச் சோதிக்கலாம். அப்படி அதிக வேலை எடுக்காமல் சமைக்கக்கூடிய கீரை உணவுகளின் செய்முறை இங்கே உங்களுக்காக….
இந்தக் கீரை உணவுகளின் சுவை குட்டீஸுக்கும் நிச்சயம் பிடிக்கும். இந்த வார வீக் எண்டை கீரை ஸ்பெஷல் விருந்தாக்குங்கள்.
தேவையானவை:
முள்ளங்கிக்கீரை – ஒரு கட்டு (தண்ணீரில் அலசி, பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வேகவிடவும். இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், கடைசியில் சிறிதளவு மிளகுத்தூள் தூவி இறக்கலாம். வேகவைத்த துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பைச் சேர்த்துக் கிளறி இறக்கலாம்.