ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பைத் தொடரில் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க மறுத்த சம்பவம் மூன்று நாள்களாக பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில், “பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்கிறோம்’ என கேப்டன் சூர்யகுமார் யாதவ் காரணம் தெரிவிக்க, `பாகிஸ்தானுடன் விளையாடவில்லையென்றால் இந்தியாவுக்குத்தான் இழப்பு’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒருபக்கம் கூறுகிறார்.
இன்னொருபக்கம், இந்திய அணிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பிலிருந்து எந்தவொரு அறிக்கையும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) மூத்த அதிகாரியொருவர், எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டும் என சட்ட எதுவும் இல்லையென்று கூறியிருக்கிறார்.