ஸ்கால்ப் சொரியாசிஸ் இருப்பவர்களுக்கு, முடி உதிர்வும் அதிகம் இருக்கும். சொரியாசிஸ் உள்ளவர்கள் டை அடிப்பது, கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, பெர்மிங் செய்வது போன்ற கெமிக்கல் சிகிச்சைகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
சொரியாசிஸ் பாதிப்புக்கான சிகிச்சையில் இருப்பவர்கள், குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை மருத்துவ ஆலோசனையோடு ரத்தப் பரிசோதனையையும், கல்லீரல் செயல்பாட்டுக்கான பரிசோதனையையும் செய்து பார்க்க வேண்டியது அவசியம். மருத்துவ ஆலோசனையின்றி சுயமாக மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக ஸ்டீராய்டு மருந்துப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
சொரியாசிஸ் பாதிப்பை சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போல கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியுமே தவிர, நிரந்தரமாக குணப்படுத்த முடியாது. அப்படிச் சொல்லப்படுகிற சிகிச்சை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
பலரும் நினைக்கிற மாதிரி இது தொற்றுநோயும் அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றவருக்குத் தொற்றாது. ஆனாலும் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பாதிப்புள்ளவர், தனக்கான சீப்பு, சோப்பு, தலையணை, டவல் உள்ளிட்டவற்றை மற்றவர்களுடன் பகிராமலிருப்பது நல்லது. இது சொரியாசிஸ் பாதிப்புள்ளவருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமான ஆரோக்கிய அட்வைஸும்கூட.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.