சென்னை : ஒற்றைத் தலைமை விவகாரத்தில் நான் ஒன்றும் சிதம்பர ரகசியத்தை உடைக்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் பொதுக்குழு தீர்மானக்குழு கூட்டம் நடந்தது. இந்த தீர்மானக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் 2நாள் பங்கேற்ற போதும் எடப்பாடி பழனிசாமி ஒரு நாள் கூட வரவில்லை. இந்த நிலையில் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘திமுக பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று 3ம் கட்டமாக ஆலோசனை செய்தோம். தீர்மானக்குழு கூட்டம் என்பது 12 குழு உறுப்பினர்களை உள்ளடக்கியது தான்.
கூட்டத்தில் தீர்மானக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.பன்னீர் செல்வமும் பங்கேற்றார்.எடப்பாடி பழனிசாமி கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்பதில்லை. அது குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த தவறும் இல்லை.பொதுவெளியில் பேட்டி அளித்தது சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது.மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்ததை மட்டுமே பேட்டியில் கூறி இருந்தேன்.ஒற்றைத் தலைமையா ? இரட்டைத் தலைமையா? என்பதை கட்சி தான் முடிவெடுக்கும்.என் மீது நடவடிக்கை எடுப்பதாக பூச்சாண்டி காட்டுவதற்கெல்லாம் நான் கவலைப்பட போவதில்லை.ஒற்றைத் தலைமை விவகாரத்தில் தொண்டர்களின் உணர்வைத்தான் பிரதிபலித்தேன்.அதிமுக ஒற்றைத் தலைமை கோரிக்கை உள்ளங்கை நெல்லிக்கனி போன்றது. ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்பதை மாவட்ட செயலாளர்களே முடிவு செய்வார்கள்,’என்றார்.