ஒற்றை தலைமையை கைவிடாவிட்டால் போட்டி பொதுக்குழு? மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் நாளை ஆலோசனை: அதிமுக மீண்டும் 2ஆக உடையும் ஆபத்து

Share

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை முடிவை எடப்பாடி பழனிசாமி கைவிடாவிட்டால், போட்டி பொதுக்குழு நடத்த ஓபிஎஸ் அணியினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆலோசனை நடத்துகிறார். அப்படி நடத்தும்பட்சத்தில் அதிமுக கட்சி மீண்டும் 2ஆக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திடீரென, அதிமுகவை வழிநடத்த மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்  போர்க்கொடி தூக்கினர். இதை சற்றும் எதிர்பாராத ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தில் அமைதியாக இருந்தார். பின்னர் பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒற்றை தலைமை பதவி யார் வகிப்பது என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறினார்.

பொதுக்குழு நடைபெற இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், எடப்பாடி ஆதரவாளர்கள் ஒற்றை தலைமை பிரச்னையை கையில் எடுத்துள்ளது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னையால் ஓபிஎஸ் மிகவும் அப்செட்டாகி உள்ளார். அவரை சமாதானப்படுத்த முன்னாள் அமைச்சர்கள் கடந்த மூன்று நாட்களாக முயற்சி செய்து வருகிறார்கள். ஒற்றை தலைமை பதவியை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரி வருகிறார்கள். தற்போது அதிமுக கட்சியில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிப்பதால், எளிதாக அவரை அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆகிவிடுவார் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பினர், எடப்பாடி கோஷ்டியின் முயற்சியை தடுக்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். ஒற்றை தலைமை பதவியை எடப்பாடிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுத்தால், அதிமுக கட்சி சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தால் ஒரு அறிக்கை கூட விட முடியாத சூழ்நிலை ஏற்படும்.  அதேநேரம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர். அதாவது, அதிமுக கட்சி நிர்வாகிகளில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். இதைவிட்டால், இனி இதுபோன்ற ஒரு வாய்ப்பு ஏற்படாது. அதனால் எப்படியாவது வருகிற பொதுக்குழுவில், அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்று அறிவித்து, அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிசாமிதான் என்று தீர்மானம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

 23ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் முதல் தீர்மானமாக, சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய தலைவர்களுக்கு கட்சி சார்பில் ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளனர். 2வதாக, தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ரத்து செய்யப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இதையடுத்து அதிமுகவை வழிநடத்த ஒற்றை தலைமை அறிமுகப்படுத்தப்பட்டு பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் முன்மொழிந்து கூட்டத்திலேயே தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளனர். எடப்பாடி ஆதரவாளர்களின் இதுபோன்ற ரகசிய திட்டங்களை முறியடிக்க ஓ.பன்னீர்செல்வம் நேற்று 3வது நாளாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். நேற்று நடைபெற்ற ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது, வருகிற 18ம் தேதி (நாளை) சென்னையில் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களை அழைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி தென்மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில், தங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அதே தேதியில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் போட்டி பொதுக்குழுவை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி போட்டி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றால், அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com