சென்னை: ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென வந்தார். அங்கு இருந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானத்தை சேர்க்கக் கூடாது என எச்சரித்தார். இதற்கிடையில் சேலத்தில் உள்ள எடப்பாடியின் வீட்டில் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.அதிமுகவை வழிநடத்தி செல்ல இனி ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அதிமுக பொதுக்குழு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன் இந்த கோரிக்கையை எழுப்பி, எடப்பாடி ஆதரவாளர்கள் கட்சியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர். இதனால் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியை மாறி மாறி சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனாலும் இரண்டு பேரும் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து விவாதிக்க அதிமுக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், பொன்னையன், வளர்மதி உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவினர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று காலை 11.30 மணிக்கு வந்து ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தனர்.அப்போது, மதியம் 1 மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவதாக தகவல் வெளியாகியது. இந்த தகவலை கேள்விப்பட்டதும் பொதுக்குழு தீர்மான குழுவினர் பதட்டம் அடைந்தனர். இதில் சி.வி.சண்முகம் மதியம் 12 மணிக்கே கூட்டத்தில் இருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோரும் வெளியேறினர்.
சரியாக மதியம் 1.15 மணிக்கு ஓபிஎஸ் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு இருந்த தொண்டர்கள் ‘அதிமுகவின் ஒற்றை தளபதி ஓபிஎஸ் வாழ்க’ என்று கோஷம் எழுப்பி வரவேற்றனர். பின்னர் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், பொன்னையன், மற்றும் ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், தர்மர், செம்மலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன், செம்மலை உள்ளிட்ட சிலர் எடப்பாடி ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்தில் பொதுக்குழுவில் எந்த வகையான தீர்மானம் நிறைவேற்றுவது என்பது குறித்து ஆலோசனை நடத்திய நிர்வாகிகளிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், என்ன தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது என்ற கேட்டார். அவர்கள் தீர்மானத்தை இறுதி செய்து, அதற்கான கடிதத்தைக் காட்டினர். இதைத் தவிர வேறு எந்தக் கருத்தையும் தீர்மானத்தில் சேர்க்கக் கூடாது என்று கூறி ஏற்கனவே தயாரித்த அறிக்கையில் கையெழுத்து போட்டார். இதற்கு மேல் வேறு கருத்தை சேர்க்கக் கூடாது. சேர்த்தால் நான் அனுமதி தர மாட்டேன். நான் கையெழுத்துப் போடாமல், எந்த அறிக்கை தயாரித்து, பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கினாலும் அது செல்லாது. இதனால் நிர்வாகிகள் வேறு எதையும் சேர்க்கக் கூடாது என்று எச்சரித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.ஒற்றை தலைமை பிரச்னையால் கடந்த 3 நாட்களாக அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், திடீரென ஓபிஎஸ் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கட்சி தலைமை அலுவலகம் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், கட்சி அலுவலகத்தில் கூடி இருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்த பிரச்னைக்கு இடையே எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். சேலத்தில், அவருக்கு ஆதரவாக பல இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.இந்தநிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் அசோக்குமார், எம்பிக்கள் தம்பிதுரை, மேட்டூர் சந்திரசேகரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் மோகன், ராமச்சந்திரன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் அடுத்தடுத்து வந்தனர். அவர்களுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ஆலோசனை நடந்தது. இரு தலைவர்களும் மாறி மாறி ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.