போட்டி முடிந்த பின்னர் பேசிய பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், “இன்னும்கூட இதயத்துடிப்பு படபடப்பாகவே இருக்கிறது. எனக்கு 50 வயதாகிறது. இனிமேலும் இதுபோன்ற போட்டிகள் வேண்டாம். குறைந்த ரன்களை சேஸ் செய்வது சில சமயங்களில் கடினமாக இருக்கும் என்று ஆட்டத்தின் பாதியில் நாங்கள் கூறினோம். பிட்ச் இன்று அவ்வளவு ஈஸியாக இல்லை. சஹல் சிறப்பாகப் பந்துவீசினார். கடந்த போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்துடன் இன்றைய போட்டிக்கு முன்பாக உடற்தகுதி சோதனையில் ஈடுபட்டார்.

நான் அவரை இழுத்து, எல்லாம் ஓகேவா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு, 100 சதவிகிதம் ஓகேதான், களத்தில் விடுங்கள் என்றார். என்ன ஒரு அருமையான பந்துவீச்சு. ஒருவேளை இந்தப் போட்டியில் நாங்கள் தோற்றிருந்தால், இரண்டாம் பாதியை நினைத்துப் பெருமைப்பட்டிருக்க முடியாது. எங்களின் பேட்டிங் மோசமாக இருந்தது. ஷாட் செலக்ஷன், அதைச் செயல்படுத்திய விதம் அனைத்தும் மோசமாக இருந்தது. ஆனால், களத்தில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தினோம். இது போன்ற வெற்றிகள் எப்போதுமே இனிமையானவை. ஐ.பி.எல்லில் நிறைய போட்டிகளில் நான் பயிற்சியளித்திருக்கிறேன். அதில் எனக்குக் கிடைத்த சிறந்த வெற்றியாக இது இருக்கலாம்” என்று கூறினார்.