Ambulance: “சட்டைக்கூட இல்லாமல்.." சமூக ஊடகங்களில் வைரலான ஆம்புலன்ஸ் டிரைவர்! – யார் இவர்?

Share

கேரள மாநிலம் திருச்சூர் எங்கண்டியூரில் உள்ள எம்ஐ மிஷன் மருத்துவமனைக்கு வேகமாக வந்து நின்றது ஒரு ஆம்புலன்ஸ். சட்டைக்கூட அணியாத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், ஆம்புலன்சிலிருந்து அவசரமாக இறங்கி, மயக்கமடைந்த நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.

மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் கட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதைத் தொடர்ந்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் அதிகம் தேடப்பட்டது.

அஜ்மல்
அஜ்மல்

அந்த இளைஞர் பெயர் அஜ்மல் (24). சம்பவத்தன்று நடந்த நிகழ்வை ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட அஜ்மல், “சம்பவத்தன்று ஒரு நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, இரவு 9.15 இருக்கும் ஆம்பூலன்ஸை கழுவிக்கொண்டிருந்தேன். அப்போது நண்பன் சரத்திடமிருந்து ஒரு அழைப்பு. மிகவும் நடுக்கமான குரலில், `உடனே வீட்டுக்கு வரமுடியுமா?’ எனக் கேட்டான்.

என் அறை அலுவலக அறையிலிருந்து இரண்டாவது மாடியில் இருந்தது. அதனால் மேலே சென்று சட்டை அணிய நேரமெல்லாம் இல்லை என உணர்ந்து, உடனே ஆம்புலன்ஸுடன் சரத் வீட்டுக்குச் சென்றேன்.” என்கிறார்.

அஜ்மலின் செயல்கள்

இது குறித்து பேசிய சரத், “என் 17 வயது தம்பி நவீன் மொட்டைமாடியிலிருந்து தவறி விழுந்து மயங்கிவிட்டான். வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு 9 கிமீ தூரம். ஐந்து நிமிடத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்துவிட்டான் அஜ்மல். சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால், என் தம்பி உயிர் பிழைத்தார். அன்றிரவு அஜ்மலின் செயல்கள் வெறும் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் என்பதை விட ஆழ்ந்த நம்பிக்கையையும், சகோதரத்துவத்தின் தருணத்தையும் உணர்த்தியது” என்றார்.

கீழே விழுந்தது தொடரபாக பேசிய நவீன்,“மொட்டைமாடியில் இருக்கும் பூனைக்கும், புறாவுக்கும் உணவு வைப்பதற்காக சென்றேன். என்ன நடந்தது எனத் தெரியவில்லை. என் அண்ணன்கள் சரத்தும், அஜ்மலும்தான் மருத்தவமனையில் என்னை அனுமதித்தார்கள் என என் அம்மா கூறினார். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். தோள்பட்டை மற்றும் முதுகில் சிறிது வலி உள்ளது” என்றார்.

அஜ்மல்:

அஜ்மல் தளிக்குளம் பகுதியில் உள்ள ‘மெக்சிகன்’ ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரிகிறார். அஜ்மலின் வீடு ஆம்புலன்ஸ் அலுவலகம் இருக்கும் பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள சேட்டுவாவில் இருக்கிறது. அவசர அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்பதற்காக, ஆம்புலன்ஸ் அலுவலகத்திலேயே தங்கியிருக்கிறார். 9-ம் வகுப்பு பள்ளியை பாதியில் நிறுத்திய, அஜ்மல், தந்தையைப் போன்ற ஒரு நபராக அவர் கருதிய பக்கத்து வீட்டுக்காரர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அப்போது ஆம்புலன்ஸ் இல்லை.

அஜ்மல்
அஜ்மல்

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அழைத்த ஆட்டோ கூட மிகவும் தாமதமாக வந்தது. அதனால் அவர் உயிரிழந்தார். அன்று முதல், உயிர்களைக் காப்பாற்றக்கூடிய ஒருவராக இருக்க விரும்பி ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவே தன் பணியை அமைத்துக் கொண்டார்.

இது தொடர்பாக பேசிய அவர், “18 வயதில் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றேன். அன்றிலிருந்து முழுநேரமாக இந்தப் பணியைதான் செய்து வருகிறேன். உண்மையில் சொல்வதானால், இது வெறும் வேலை இல்லை. ஒருவருக்கு வாழ்நாளை அதிகரிப்பதற்கான உறுதிமொழி.

எனக்கு கட்டணமாக ரூ.10 மட்டுமே வழங்கினாலும், அதை ஏற்றுக்கொள்வேன். ஏழை நோயாளிகளிடமிருந்து எரிபொருளுக்கு மட்டுமே நாங்கள் கட்டணம் வசூலிக்கிறோம். நான் எப்போதும் ‘இந்த நோயாளி என் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன செய்வேன்’ எனக் கற்பனை செய்வேன். அந்த எண்ணம் மட்டுமே என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. நன்றியுள்ள புன்னகை பணத்தை விட மதிப்புமிக்கது” என்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com