* சரத்பவார் பெயரை முன்மொழியும் எதிர்க்கட்சிகள்
* வேட்பாளரை இறுதி செய்வதில் பா.ஜ கடும் குழப்பம்
16வது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்நிறுத்த காங்கிரஸ் வகுத்த வியூகத்தால் வெலவெலத்து போய் நிற்கிறது ஆளும் பா.ஜ. ஒன்றிய அரசு அவர்கள் கையில், பெரும்பான்மை மாநிலங்கள் அவர்கள் கையில், மாநிலங்களவையில் வேறு 112 எம்பிக்களை எட்டி சாதனை என்றெல்லாம் மார் தட்டி வந்த பா.ஜவுக்கு சற்று சறுக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இப்போது. காரணம் சரத்பவார். இந்த ஒரு பெயர் தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் அதிக அக்கறை காட்ட வேண்டிய நிலையை பா.ஜவுக்கு உருவாக்கி விட்டது. நாட்டிற்கே அறிமுகம் இல்லாத ராம்நாத் கோவிந்தை கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போதும், காங்கிரஸ் நிறுத்திய மீராகுமாரை எதிர்கொண்ட போதும் இல்லாத பரபரப்பு இப்போது வருவதற்கு காரணமும் சரத்பவாா் என்கிற அந்த ஒற்றை பெயர் தான்.
கட்சி எல்லைகளை தாண்டிய முகம், அனைத்து கட்சியினருடனும் நெருக்கம், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி. ஏற்கனவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பா.ஜ மீது உக்கிர கோபத்தில் இருக்கிறார். அதனால் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவை பெறுவது முக்கியம் என்ற நிலைக்கு வந்து விட்டது பா.ஜ. மக்களவையில் 334 எம்பிக்கள், மாநிலங்களவையில் 112 எம்பிக்கள், சட்டசபைகளில் 1762 எம்எல்ஏக்கள் இருந்தும் மொத்தம் உள்ள 10,79,394 எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளில் 13 ஆயிரம் ஓட்டுகள் பா.ஜவுக்கு பற்றாக்குறை.2017ல் ராம்நாத் கோவிந்தை நிறுத்தும் போது 7,02,044 எலக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகள், அதாவது 65.65 சதவீத வாக்குகள் அவர் பக்கம் வந்து விட்டது. எதிர்த்து நின்ற மீராகுமாருக்கு 3,67,314 ஓட்டுகள்(34.35 சதவீதம்) கிடைத்தன. ராம்நாத் கோவிந்திற்கு 21 மாநிலங்களும், மீராகுமாருக்கு 10 மாநிலங்களும் ஆதரவு தெரிவித்தன. அப்போது ராம்நாத் கோவிந்த் வெற்றிக்கு அதிமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், பிஜூஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, இந்திய தேசிய லோக்தளம் கட்சிகள் அளித்த 1,33,907 வாக்குகள் முக்கிய பங்கு வகித்தன.
இன்று சரத்பவார் நிறுத்தப்பட்டால் ஜெகன், நவீன் பட்நாயக் பல்டி அடிக்கலாம். அது பாஜ வெற்றியை பதம் பார்க்கலாம். அந்த பயம் தான் இப்போது பாஜவிற்கு வந்துள்ளது. தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை பாஜ வேட்பாளர்களாக நிற்க வைக்கலாம் என்ற பரிசீலனை பாஜ முகாமில் நடக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதில் வாக்குகள் சிந்தாமல் விழும் என்றால் ராஜ்நாத் சிங் நிறுத்தப்படுவார். இல்லையேல் வெங்கையாநாயுடு நிறுத்தப்படுவார் என்ற யூகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அப்படி வெங்கையாநாயுடு நிறுத்தப்படும் பட்சத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் சொந்த மாநிலத்துக்காரர் என்ற அடிப்படையில் ஆதரவளிக்கலாம். அதோடு வெங்கையாநாயுடுவிடம் இருக்கும் நட்பின் அடிப்படையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் ஆதரவைக்கூட பெற முடியும் என்று பாஜ நம்புகிறது.
குறிப்பாக இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை வெற்றி பெற விட்டுவிட்டால் 2024 மக்களவை தேர்தலை அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்கொள்ள ஒருவாய்ப்பு ஏற்பட்டு விடும். அந்த ஒற்றுமையை ஏற்படுத்த விடக்கூடாது என்ற அடிப்படையில் பாஜ களம் இறங்கி வருகிறது. இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கூட்டும் ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கூட கவுரவம் பார்க்காமல் காங்கிரஸ் பிரதிநிதிகளாக மல்லிகார்ஜூன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதனால் இந்த ஜனாதிபதி தேர்தல் வெற்றி பாஜவுக்கு கவுரவப்பிரச்னையாக கூட மாறிவிட்டது. ஆந்திராவில் ஜெகன் ஆதரவு அல்லது ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆதரவு பெற்றால் போதும் வென்று விடலாம்தான். ஆனால் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்ட சரத்பவார் களத்தில் குதித்து விட்டால்… மகாராஷ்டிராவில் ஆட்சி பறிகொடுத்த அனுபவம் வேறு அடிக்கடி வந்து போவதால் தான் பாஜ அணியில் இந்த பீதி. இல்லையேல் மிக எளிதாக ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்டு கடந்து சென்றுவிடும். இப்போது வேட்பாளர் யார் என்பதையே முடிவு செய்ய முடியாமல் முழிக்கிறது பாஜ எல்லாம் பயம்.