சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக மட்டுமே என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தாங்கள் தான் எதிர்க்கட்சியாக செயல்படுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் சமீப காலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற செயல்களால் அதிமுகவை ஒழித்துவிட்டு அதன் இடத்தை பிடிக்க பாரதிய ஜனதா முயற்சித்து வருவதாக அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் குற்றம் சாட்டி பகிரங்கமாக பரபரப்பு ஏற்படுத்தியிருந்தார்.
தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக தாங்கள் தான் செயல்பட்டு வருவதாக வெளிக்காட்டி கொள்வதில் அதிமுக பாஜகவுக்கு இடையே மறைமுக போட்டி நிலவி வருவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் சிறந்த எதிர்க்கட்சியாக அதிமுக செயலாற்றி வருவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் செயல்பாடுகளில் அதிமுக பின்தங்கி இருப்பது போன்ற மாயத்தோற்றம் சமீப காலமாக உருவாக்கப்பட்டு வருவதாக ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகள் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக உள்ளது. மக்களின் முக்கிய பிரச்சனைகளுக்காக பல முறை பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிக்கையில் ஓபிஎஸ் கூறியுள்ளார். மக்களின் பிரச்சனைகளை சுட்டிக் காட்டி பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக தான் எதிர்க்கட்சியாக செயலாற்றி வருவதாக அக்கட்சியினர் கூறி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.