
பட மூலாதாரம், ADANI GROUP
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், விலை மனுக் கோரல் இன்றி, இந்தியாவிற்கு சொந்தமான அதானி நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டமை, தற்போது பேசுப் பொருளாக மாறியுள்ளது.
பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (கோப் குழு) முன்னிலையில் இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ வெளியிட்ட கருத்து, இன்று பாரிய சர்ச்சையை தோற்று வித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு கூறியதாக மின்சார சபையின் தலைவர் கூறியிருந்தார்.
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை எவ்வாறு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன்போது கேள்வி எழுப்பியிருந்தார்.
”இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு திட்டம் வழங்கப்பட்டது எவ்வாறு?. இந்தியா அரசாங்கத்தினால் இது தொடர்பிலான அறிக்கை இருக்கின்றதா? எமது பிரதிநிதி இவர் என இந்தியா கோரிக்கை இருக்கின்றதா?” என பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.
அதற்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ பதிலளித்தார்.
பட மூலாதாரம், MMC FERDINANDO
”ஜனாதிபதியினால் இது தொடர்பிலான அறிவிப்பு அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் பின்னர் ஜனாதிபதி என்னை அழைத்திருந்தார். கடந்த நவம்பர் 24ம் தேதி என நினைக்கின்றேன். இதை அதானி நிறுவனத்திற்கு வழங்குங்கள் என கூறினார். இதை வழங்குமாறு இந்திய பிரதமர் மோடி எனக்கு அழுத்தங்களை விடுக்கின்றார் என அவர் என்னிடம் கூறினார். இது எனக்கும், இலங்கை மின்சார சபைக்கும் இடையில் உள்ள பிரச்சினை இல்லை. இது முதலீட்டு சபைக்குரிய பிரச்சினை என நான் கூறினேன். ஜனாதிபதி எனக்கு உத்தரவு பிறப்பிக்கின்றார், அதனால், நிதி அமைச்சு இதனை செய்துக்கொள்ளுமாறு நான் கடிதமொன்றை எழுதினேன்” என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதி மறுப்பு
மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் வெளியிட்ட கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை தான் வழங்கவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
பட மூலாதாரம், ADANI GROUP
மின்சார சபைத் தலைவர் வாபஸ்
கோப் குழுவின் முன்னிலையில் தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சார சபை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக, உணவு உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாக பெர்டினான்டோ கூறியுள்ளார்.
இந்த கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானியை முந்திய கௌதம் அதானியின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: