பும்ரா கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. இந்தப் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பலாகவே ஆடியிருக்கிறது. மீண்டும் இந்திய பேட்டர்கள் ஏமாற்றமளித்திருக்கின்றனர். முதல் நாள் ஆட்டத்தில் என்ன நடந்தது?
பலத்த நெருக்கடிக்கும் அழுத்தத்துக்கும் மத்தியில் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்த பும்ராதான் டாஸை வென்றிருந்தார். சிட்னி பிட்ச் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கக்கூடியது என்பதால் முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். கூடவே, “நாங்கள் அணியாக ஒன்றாக இருக்கிறோம். அணியில் யாருமே சுயநலமாக யோசிப்பதில்லை.’ என சுயவிளக்கத்தையும் கூறிவிட்டுச் சென்றார்.
இந்திய அணியும் பேட்டிங்கைத் தொடங்கியது. கடந்த போட்டிகளைப் போல அல்லாமல் இந்திய அணியின் பேட்டர்கள் பொறுப்போடு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ராகுல் இந்த முறை ஓப்பனிங் இறங்கியிருந்தார். முதல் 10 ஓவர்களை கூட இந்த ஓப்பனிங் கூட்டணி கடக்க முடியவில்லை. ஸ்டார்க்கும் போலண்ட்டும் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே இவர்களின் விக்கெட்டை வீழ்த்தினர். ஜெய்ஸ்வால், ராகுல் என இருவருமே தற்காப்பாக ஆடுவதில் வல்லவர்கள் என்பதால், ஆரம்பத்திலிருந்தே இருவரையும் பந்தை லீவ் செய்ய விடாமல் ஆட வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். இதனால் பந்தை ஃபுல்லாகவும் லெக் ஸ்டம்ப் லைனிலும் தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தனர். இதற்குப் பலனும் கிடைத்தது. ஸ்டார்க் டைட்டாக வீசிய பந்தை லெக் சைடில் ப்ளிக் செய்ய முயன்று ஷார்ட் ஸ்கொயர் லெகில் கேட்ச் ஆகி வெளியேறினார்.