புதிதாகத் திருமணமானவர்களுக்கு…
புதிதாகத் திருமணமானவர்களுக்கு வீரியம் குறைவான கருத்தடை மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். மாதவிடாய் வந்த 5-வது நாளில் இருந்து 21 நாள்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும். இந்த மாத்திரையை மொத்தமாக 3 வருடம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். அதிலும், வருடத்துக்கு ஒரு முறை, 3 மாதங்களுக்கு இந்தக் கருத்தடை மாத்திரையைச் சாப்பிடக் கூடாது. 3 மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் சாப்பிட ஆரம்பிக்கலாம்.
இதன் பக்க விளைவுகள் என்று பார்த்தால், மாத்திரை சாப்பிடுகிற காலகட்டத்தில் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஹார்மோனல் இம்பேலன்ஸ் வராமல் இருப்பதற்காக, 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரண்டு மாதவிடாய்களின் இடையே லேசான ரத்தப் போக்கு ஏற்படலாம், மாதவிடாய் ஒழுங்கற்றுப் போகலாம், மாதவிடாய் வருகிற நாள்கள் குறைந்தும் போகலாம். உதாரணத்துக்கு, 5 நாள் மாதவிடாய் வந்து கொண்டிருந்தவர்களுக்கு 4 நாளும், 3 நாள்கள் வந்தவர்களுக்கு 2 நாள் அல்லது ஒன்றரை நாள் என்று குறைந்து போகலாம். மருத்துவரின் அறிவுரையை மீறித் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால், நரம்பு சம்பந்தமான பிரச்னைகளும் வரலாம், கவனம்.


ஒரு குழந்தைப் பெற்ற அம்மாக்களுக்கு…
இரண்டாவது குழந்தைப் பெறுவதற்கு போதிய இடைவெளி விட வேண்டும் என்று நினைக்கிற அம்மாக்களுக்கு, காப்பர் டி சரி. இது காப்பரில் செய்த ‘டி’ வடிவ கருத்தடை சாதனம். இதில், 4 வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது, 10 வருடத்துக்கு ஒருமுறை மாற்றுவது என இரண்டு வகை இருக்கின்றன. எந்த வகை காப்பர் டி பொருத்தியிருந்தாலும், அது பொருத்தப்பட்ட இடத்தில் இருந்து நகராமல் இருக்கிறதா என்று 4 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே, காப்பர் டி-யுடன் இணைந்திருக்கிற நைலான் நூல் தெரிகிறதா என்று நீங்களும் பரிசோதித்து கொள்ள முடியும்.
அடிக்கடி கனமான பொருள்கள் மற்றும் தண்ணீர்க் குடங்களைத் தூக்கினாலோ அல்லது முக்கி மலம் கழித்தாலோ காப்பர் டி வெளியே வந்து விடலாம். இது கொஞ்சம் நகர்ந்தாலும் கருத்தரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடினமல்லாத அலுவலக வேலைபார்க்கிற பெண்கள் என்றால், 10 வருடங்களுக்கான காப்பர் டி-யையே வைத்துக்கொள்ளலாம். பக்க விளைவுகள் என்றால், ரத்தப்போக்கு ஏற்படலாம்.