மும்பை: சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதிய மாநகராட்சி பேருந்து – 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு

Share

மும்பையில் மாநகராட்சி பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது. மும்பை குர்லா மேற்கு பகுதியில் இருந்து அந்தேரியை நோக்கி மாநகராட்சி பெஸ்ட் பேருந்து ஒன்று நேற்று இரவு 9.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ் குறுகலான சாலையில் சென்றது. அந்த சாலையின் இருபக்கமும் வாகனங்கள் குறிப்பாக கார்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. பஸ் மார்க்கெட்டில் வந்த போது எதிரில் மற்றொரு எலக்ட்ரிக் பஸ் வந்தது. அந்த பஸ் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றில் மோதியது. அதோடு நிற்காமல் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மற்றும் இதர வாகனங்களில் மோதியது.

மேலும் சாலையோரம் நடந்து சென்ற 10 பேர் மீதும் மோதி இறுதியில் குடியிருப்பு கட்டடம் ஒன்றின் கேட் மீது மோதி நின்றது. இதில் சாலையில் நடந்து சென்றவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். பஸ்சில் பயணம் செய்த 29 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் குர்லாவில் உள்ள பாபா மருத்துவமனை மற்றும் சயான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது. டிரைவரிடம் விசாரித்த போது பிரேக் பிடிக்காத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மனித தவறா அல்லது பிரேக் பிடிக்காமல் போனதால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருவதாக இணை போலீஸ் கமிஷனர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார். விபத்துள்ளான பஸ்ஸை ஆர்.டி.ஒ.அதிகாரி ரவி கெய்க்வாட் நேரில் ஆய்வு செய்தார்.

இச்சம்பவத்தால் குர்லா மேற்கு பகுதியில் சாலை போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. போலீஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் பஸ் பிரேக் பிடிக்காத காரணத்தால் இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்த அகமத்(26) என்பவர் இது குறித்து கூறுகையில்,” நான் வீட்டில் இருந்து ரயில் நிலையம் செல்வதற்காக கிளம்பியபோது மிகப்பெரிய சத்தம் கேட்டது. நான் ஓடிச்சென்று பார்த்தபோது பஸ் ஒன்று பாதசாரிகள் மற்றும் ஆட்டோ, கார்கள் மீது மோதியிருந்தது. ஆட்டோவில் இருந்த பயணிகளை நாங்கள் மீட்டு மற்றொரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். பஸ் போலீஸ் வாகனம் ஒன்றின் மீதும் மோதியது. இதில் 3 கார்கள் சேதம் அடைந்தன. எனது நண்பர்களும் மீட்புப்பணிகளுக்காக உதவினர்”என்றார்.

விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்கள் பஸ் ஓட்டுனர் சஞ்சய் மோரேயை பிடித்து அடித்து உதைத்தனர். போலீஸார் வந்து டிரைவரை மீட்டனர். விபத்துக்குள்ளான பஸ்சில் பயணிகள் நிரம்பி இருந்தனர்.விபத்துக்குள்ளான பஸ் வாங்கப்பட்டு 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தது. அந்த பஸ் தனியார் நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது என்று மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர். பஸ் மோதிக்கொண்ட காட்சிகள் சோசியல் மீடியாவில் பரவியிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com