
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியும் முன்னிலை வகித்து வருகின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்டன.
மறுபுறம், பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகாயுதி கூட்டணியில் தேர்தலைச் சந்தித்தன.
ஜார்க்கண்டில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை நிலவரம்

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்
- மகா விகாஸ் அகாடி கூட்டணி- 55
- மகாயுதி கூட்டணி – 218
- மற்ற கட்சிகள்- 15
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம்
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி- 49
- பாஜக கூட்டணி – 29
- மற்ற கட்சிகள்- 3

ஜார்க்கண்டில் போட்டியிடும் முக்கியக் கட்சிகள்
பட மூலாதாரம், ANI
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜக பெரும்பான்மையான இடங்களில் போட்டியிட்டு அதன் கூட்டணியில் உள்ள ‘அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் பேரவை’க்கு (ஏஜெஎஸ்யு) பத்து இடங்களை வழங்கியது.
‘இந்தியா’ கூட்டணியின் முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணிக்கு எதிராகக் களமிறங்கின.

மகாராஷ்டிரா தேர்தல் களத்தின் நிலவரம்
இந்த முறை மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சிகள் களத்தில் உள்ளன.
ஆறு கட்சிகளின் (மகா விகாஸ் அகாடி மற்றும் மகாயுதி) இரண்டு கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருந்தாலும், மூன்றாவது கூட்டணியான பகுஜன் வஞ்சித் அகாடி மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைக்க145 தொகுதிகள் தேவை.

அஜித் பவார் முன்னிலை
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி தொடர்ச்சியாக அரசியல் தளத்தில் அடிபட்டு வந்த தொகுதியாகும். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவார் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யுகேந்திர பவார் போட்டியிடுகிறார்.
முதல் கட்ட தேர்தல் எண்ணிக்கை முடிவில் அஜித் பவார் 9,291 வாக்குகளும், யுகேந்திர பவார் 5,668 வாக்குகளும் பெற்றுள்ளனர். அஜித் பவார் 3,623 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அதேபோல, நாக்பூர் தென்மேற்கு தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், தேவேந்திர பட்னாவிஸ் 4713 வாக்குகளும், பிரபுல் குதே 2467 வாக்குகளும் பெற்றுள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ் 2246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
பாபா சித்தீக்கி மகன் ஜீஷான் சித்தீக்கியின் நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images/@SardesaiVarun (X)
பாபா சித்தீக்கியின் மகன் ஜீஷான் சித்தீக்கி மகாராஷ்டிரா சட்டசபையின் பாந்த்ரா கிழக்கு தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.
சமீபத்தில் பாபா சித்தீக்கி கொலை செய்யப்பட்டார். அவர் காங்கிரசை விட்டு வெளியேறி அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். இந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது மகன் ஜீஷான் சித்தீக்கியும் அஜித் பவாரின் அணியான என்சிபியில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் இதுவரை ஜீஷான் சித்தீக்கி 7559 வாக்குகளும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) வேட்பாளர் வருண் சர்தேசாய் 12796 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜீஷான் 5237 வாக்குகள் பின்தங்கி உள்ளார்.
வருண் சர்தேசாய் ஆதித்யா தாக்கரேவின் உறவினர் ஆவார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (மகா விகாஸ் அகாடி) வேட்பாளர் திருப்பதி பாலா சாவந்த் 4868 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஜார்க்கண்ட் தேர்தல் களத்தின் நிலவரம்
பட மூலாதாரம், ANI
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 41 தொகுதிகளில் வெற்றி தேவை.
கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளையும், காங்கிரஸ் 16 தொகுதிகளையும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் சிபிஎம் தலா ஒரு தொகுதியையும் பெற்றன. இந்தக் கூட்டணி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது. பாஜகவுக்கு 25 தொகுதிகள் கிடைத்தன.
மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில், ஜேஎம்எ கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் சந்தால் பர்கானாவின் 18 தொகுதிகளிலும், கோல்ஹான் பகுதியில் 14 தொகுதிகள் மீதும் அனைவரின் பார்வையும் குவிந்துள்ளது.
கடந்த 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் சந்தால் பர்கானாவில் உள்ள 18 தொகுகளில் 3 தொகுகளில் மட்டுமே பாஜகவால் வெற்றி பெற முடிந்தது. இந்த முறையும் அனைவரின் பார்வையும் இந்த 32 தொகுதிகள் மீதுதான் இருக்கும்.
தேர்தலில் நேரடியாக மோதிய முக்கிய தலைவர்கள் – மகாராஷ்டிரா
அஜித் பவார் – யுகேந்திர பவார்
மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி தொடர்ச்சியாக அரசியல் தளத்தில் அடிபட்டு வந்த தொகுதியாகும். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அஜித் பவார் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து யுகேந்திர பவார் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் தொகுதியான பாராமதியில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் சுப்ரியா சுலேவை எதிர்த்து களம் இறக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் சுப்ரியா சுலே வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றார்.
ஆதித்யா தாக்கரே
மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே இந்த முறை வோர்லி தொகுதியில் போட்டியிடுகிறார். 2019ம் ஆண்டு முதல்முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு அவர் சென்றார். ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இருந்து மிலிந்த் தியோரா அவருக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
அமித் தாக்கரே
மஹிம் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். எம்.என்.எஸ். தலைவர் ராஜ் தாக்கரேவின் மகனான அமித் தாக்கரே முதல் முறையாக தேர்தலில் களம் காணுகிறார். ஷிண்டேவின் சிவசேனாவில் இருந்து சதா சர்வன்கரும், உத்தவின் சிவசேனாவில் இருந்து மகேஷ் சாவந்தும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ஜார்க்கண்டில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள்
ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பர்ஹெத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இருந்து ஏற்கனவே 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அவர் பாஜகவின் கமலியம் ஹெம்ப்ராமை எதிர்கொள்கிறார்.
சம்பாய் சோரன்
பண மோசடி வழக்கில் ஹேமந்த் சிறை சென்ற போது, சம்பாய் சோரன் அம்மாநிலத்தின் முதல்வராக பணியாற்றினார். சிறையில் இருந்து ஹேமந்த் வெளியே வந்து மீண்டும் முதல்வரான பிறகு சம்பாய் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் தற்போது சரைகேலா தொகுதியில் போட்டியிடுகிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் கணேஷ் மஹாலி அவரை எதிர்த்து போட்டியிடுகிறார்.
கல்பனா சோரன்
கண்டேய் தொகுதியில் போட்டியிடுகிறார் கல்பனா சோரன். ஹேமந்தின் மனைவியான இவர் 2024ம் ஆண்டு இந்த தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து பாஜகவின் முனியா தேவி போட்டியிடுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு