தொப்புள் கொடியை வெட்டும்போது, அதை வெட்டும் நபர் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு கிளவுஸ்கூட அணிந்திருக்க வேண்டியிருக்கும். பிறந்த குழந்தைகள் எப்போது நோய்வாய்ப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. பிறக்கும்போதே மஞ்சள்காமாலை வந்து குழந்தை பாதிக்கப்படலாம். அதுபோன்ற தருணங்களில், தொப்புள்கொடி மூலமாகத்தான் டிரான்ஸ்ஃபியூஷன் எனப்படும் ரத்த மாற்றம் செய்வது, மஞ்சள் காமாலை பாதிக்ப்படும்பட்சத்தில் ரத்தத்தை மாற்றிவிட்டு வேறு ரத்தம் ஏற்றுவது போன்றவற்றைச் செய்வோம்.

இப்படிச் செய்யாவிட்டால் மூளை பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துபோகலாம் அல்லது வலிப்பு நோய் ஏற்பட்டு மூளை பாதிப்போடு குழந்தை வளரும். இதற்கெல்லாம் தொப்புள் கொடி அவசியம். அதிலுள்ள குழாய்கள் வழியே இந்த வேலைகள் நடக்கும்.
முதலில் தொப்புள்கொடியை கிளாம்ப் என்று சொல்லக்கூடிய க்ளிப் போடுவது போன்று செய்வோம். இரண்டு கிளாம்ப் போட்டு, நடுவில்தான் வெட்டுவோம். இந்த கிளாம்ப் செய்யும்போது அதிகபட்ச சுத்தம், சுகாதாரத்துடன் செய்யவில்லை என்றால், லேசான இன்ஃபெக்ஷன்கூட பிற்காலத்தில் குழந்தையை பாதிக்கலாம்.
இன்னும் சொல்லப்போனால் பல குழந்தைகளுக்கு நரம்பு கிடைக்காமல், தொப்புள்கொடி வழியேதான் ஆன்டிபயாடிக் மருந்துகளையே செலுத்துவோம். பச்சிளம்குழந்தைகள் மருத்துவரால்தான் இதைக் கையாள முடியும். மகப்பேறு மருத்துவரோ, செவிலியரோகூட இதைச் செய்வது கிடையாது. இத்தனை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கையில், எதைப் பற்றியும் கவலையின்றி, குழந்தையின் தொப்புள்கொடியை அப்பாவோ, வேறு யாரோ வெட்டுவது என்பதெல்லாம் மிகத் தவறான, ஆபத்தான விஷயமே. சட்டப்படியும் இது தவறு. தொப்புள்கொடி மூலம் வரக்கூடிய இன்ஃபெக்ஷன் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
பேசத் தெரியாத, உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாத, சரியாகப் பார்க்கத் தெரியாத பச்சிளம் குழந்தையின் உயிரோடு விளையாடுகிற இதுபோன்ற செயல்கள் மிகப் பெரிய குற்றங்களே…
இன்ஃப்ளுயென்சராக இருக்கும் இவரின் இத்தகைய செயல்களைப் பார்த்து மற்றவர்களும் இப்படிச் செய்ய ஆரம்பித்தால் என்னவாகும்? மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.