விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை, பள்ளிமாணவர்களே மண்வெட்டியால் மண் அள்ளி சரிசெய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கடும் கண்டனங்களை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டுக்கொண்டான் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியில் காலாண்டுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதற்கிடையே ஆண்டுக்கொண்டான் கிராமத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளி நுழைவுவாயில் முன்பாக பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் பள்ளி விடுமுறை நாள்களை பயன்படுத்தி, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை கிராம நிர்வாகத்தினர் செய்து முடிக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், குழாய் பதிக்கும் பணிகள் திட்டமிட்ட நாள்களுக்குள் முடிக்கப்படாமல் பாதியில் அப்படியே போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் காலாண்டு விடுமுறைக்காலம் முடிந்து, பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி நுழைவுவாயில் முன்பாக தோண்டப்பட்ட பள்ளம் சரிசெய்யப்படாமல் இருந்தது பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஆசிரியர்கள் முன்னிலையில், தொடக்கப்பள்ளி மாணவர்களே மண்வெட்டியால் மண்ணை அள்ளிச்சென்று பள்ளத்தில் கொட்டி நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலை, இரண்டாவது நாள்களாக தொடர்ந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் கூலி வேலை செய்வது நியாயமா? ஊர் மக்கள் நன்மைக்காக குழாய் பதிக்கும் பணி நடப்பது சரியென்றாலும் பள்ளி வேலைநாள்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படுத்தாத வகையில் பள்ளத்தை சரி செய்து கொடுக்க வேண்டியது வேலைதாரர்களின் கடமைதானே. ஆகவே உடனடியாக பள்ளத்தை சரி செய்வதற்கு கிராம நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்தனர்.

இதற்கிடையே பள்ளி மாணவர்கள் மண் சுமந்துச்சென்று பள்ளத்தை சரி செய்வது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்புகொண்டு, பள்ளி மாணவர்களை வேலை வாங்கியதற்காக கடும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, பணகுடி கிராம பஞ்சாயத்து சார்பில் ஜே.சி.பி.எந்திரம் மூலமாக பள்ளி முன்பு தோண்டப்பட்டிருந்த பள்ளம் மூடி சரிசெய்யப்பட்டது.