
(இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்கள் சிலவற்றில் இன்று (07/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக சமூக வலைதள பாவனையை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இலங்கை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக ‘தினகரன் – வாரமஞ்சரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: “வரி அறவீடுகள் மூலம் சமூக ஊடகங்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘கோட்டா கோ ஹோம்’ உள்ளிட்டவற்றின் குரலை முடக்கியதைப் போன்று சமூக வலைதளங்களின் குரல்களையும் முடக்குவதற்கான நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்ததாக, அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“20 ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்“
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க
நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதையடுத்து ஊடகங்களிடம் பேசிய கரு ஜயசூரிய, “பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் பிரதான கடமையாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க முன்னுரிமை வழங்க வேண்டும். நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் பிரச்னைகளுக்கு 20 ஆவது திருத்தமே காரணமாகும். அதனால் 20ஆவது திருத்தத்தை இல்லாமலாக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஜெனிவா கூட்டத்தொடரில் நெருக்கடிகள் ஏற்படும்’
போர் குற்றச்சாட்டுகளில் இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளிய வேளையில் தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்ட ரஷ்யா, சீனா போன்ற நாடுகளை பகைத்துக்கொண்டால் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு நெருக்கடிகள் ஏற்படும் என, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளதாக, ‘தமிழ் மிரர்’ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
“ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தடுத்துவைக்கப்பட்ட செயற்பாட்டில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இலகுவாக கையாள வேண்டிய ஒரு விடயத்தில் அரசாங்கம் தூரநோக்குடன் சிந்திக்காது போயுள்ளமை ஆரோக்கியமான விடயம் இல்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஏரோஃப்ளோட் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு இலங்கையுடன் எந்த பிரச்னையும் இல்லை, அவர்களுக்கும் அயர்லாந்து விமான நிலையத்திற்கும் இடையிலேயே கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளது. இலங்கை இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. இலங்கைக்கு இதில் எந்த நட்டமும் ஏற்படவில்லை, பாதிப்பும் ஏற்பட்டதாக கூறவும் முடியாது. எனவே, இந்த விடயத்தில் இலங்கையின் தலையீடு என்பது அவசியம் இல்லை என்றே கருதுகிறேன்” எனவும் அவர் கூறியுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: