Hardik Pandya bowling Mohammad Azharuddin doubts, ஹர்திக் பாண்டியா பவுலிங்

Share

ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியன் பட்டத்துக்கு அழைத்துச் சென்று வாகை சூடினார், இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விக்கெட்டுகளை சடுதியில் கைப்பற்றி ஆட்டத்தின் போக்கையே மாற்றியது குஜராத் வெற்றிக்கு வித்திட்டது, இந்நிலையில் அவர் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை போட்டு நிறைவு செய்ய முடியும் என்று மொகமட் அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது, வெகுநீண்ட தொடரில் தனது கிரிப்பை விட்டுக்கொடுக்காமல் ஆடியது குஜராத் டைட்டன்ஸ்.

அறிமுக அணியான குஜராத்தை சிறப்பாக வழிநடித்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். உடல்தகுதி பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடருக்கு முன் அவர் அவ்வப்போது விளையாடிய போட்டிகளிலும் பந்துவீச வில்லை.

இதனால் அவரது பந்துவீச்சு குறித்து கேள்வி எழுந்தது. இந்திய அணிக்கு திரும்பினாலும் அவரால் ஒரு முழு ஆல்ரவுண்டராக விளையாட முடியுமா என பலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அனைவரையும் வியக்க செய்யும் வகையில் ஐபிஎல் தொடரில் பாண்டியா சிறப்பாக பந்துவீசி மீண்டும் கவனம் ஈர்த்தார்.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் பாண்டியாவின் பந்துவீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஹர்திக் பாண்டியாவுக்கு பந்துவீசும் திறமை இருக்கிறது. இந்திய அணிக்கு பல போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசியுள்ளார். ஆனால் காயம் காரணமாக பல போட்டிகளில் அவரால் ஆடமுடியாமல் போனது.

இப்போது காயத்திலிருந்து பாண்டியா திரும்பிவந்துள்ளார். 20 ஓவர் போட்டியில் 4 ஓவர்கள் வரை வீசுகிறார். ஆனால் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி வைத்துப் பார்த்தால் அவரால் எத்தனை போட்டிகளுக்கு 4 ஓவர்களை வீச முடியும் என்பது தெரியாது. ஆல்ரவுண்டராக இருக்கும் பாண்டியா நிச்சயமாக பந்துவீச வேண்டும் என்பது தான் விருப்பம்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு ஆட்டத்தையே மாற்றிவிட்டது. 4 ஓவர்களில் 3விக்கெட்டுகளை வீழ்த்தி பாண்டியா சிறப்பாகப் பந்துவீசினார். பேட்டிங்கிலும் விரைவாக 34 ரன்கள் சேர்த்தார். அவர் சிறந்த வீரராக விளங்கி வருகிறார். தொடர்ந்து அவர் அதை செய்யவேண்டும், அதற்கு உடல்தகுதி வேண்டும்” என அசாருதீன் தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com