இதில் குடும்பத்தினர், நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பாடகர் ஷங்கர் மகாதேவன், ஜாவேத் அக்தர், சலீம் மெர்ச்சண்ட் உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதர பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர். கிருஷ்ணகுமார் குன்னத் என்கிற கேகே-வின் மறைவுக்கு அவரது மகள் தமரா உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார். ‘Love you forever dad’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த நடிகர் ஓம்புரியின் முன்னாள் மனைவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “கொல்கத்தா கேகேயை கொலை செய்துவிட்டது. அதனை மறைக்க கேகேவிற்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. 2500 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் 7,000 பேருக்கு அனுமதி கொடுத்ததோடு ஏ.சி. வசதியும் அங்குக் கொடுக்கப்படவில்லை. கேகே நான்கு முறை இது குறித்து கேட்டும் அந்தப் பிரச்னை சரி செய்யப்படவில்லை. அதோடு அடிப்படை மருத்துவ வசதியும் அங்கே இல்லை. இது குறித்து சிபிஐ விசாரிக்கவேண்டும். அதுவரை கொல்கத்தாவில் நிகழ்ச்சிகள் நடத்துவதை பாலிவுட் புறக்கணிக்கவேண்டும்” என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.