வயதாகும் போது பெரும்பாலான முதியவர்கள் ஓரம்கட்டப்படுகிறார்கள். திணிக்கப்படும் தனிமை ஒரு கட்டத்தில் வாழ்வின் அங்கமாகவே மாறிவிடுகிறது. பேச ஆளில்லாமல், சிலர் தமக்குத் தாமே பேசிக் கொள்வதையும் கவனித்து இருக்கலாம்.
இந்தநிலையில் `அம்மா மற்றும் பாட்டியை வெளியில் அழைத்துச் செல்வது, அவர்களின் ஆயுசு நாள்களை அதிகரிக்கும்’ என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
கலிஃபோர்னியா, சான் ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சராசரியாக 71 வயதுடைய 1,600 பெரியவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். சமூக பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனிமையில் இருப்பவர்கள் அதிக இறப்பு விகிதங்களை வெளிப்படுத்தினர்.

ஆய்வில் பங்கேற்ற, தனிமையாக இருந்தவர்களில் கிட்டத்தட்ட 23 சதவிகிதத்தினர், ஆறு ஆண்டுகளுக்குள் இறந்தனர். இதிலிருந்து முதுமையில் தனிமை இறப்புக்கு முக்கிய பங்காகிறது என்பதை அறிந்தனர்.
பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அல்லது வேறு இடத்திற்குச் சென்ற பிறகு சமூகத் தனிமை பெற்றோரையும் தாத்தா பாட்டிகளையும் பாதிக்கலாம்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை நண்பர்களுடன் பழகுவதை விட, தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதில் செலவழிக்கிறார்கள்; இதனால் அவர்களது நட்புகள் பல ஓரங்கட்டப்படுகின்றன.
தங்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு, தமக்கென நிலையான நட்புவட்டத்தைக் கண்டுபிடிப்பது முதியவர்களுக்கு கடினமாகிறது; மேலும், பலர் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
மனித மேம்பாட்டுப் பேராசிரியராக இருக்கும் ரோஸ்மேரி பிளீஸ்னர் கூறுகையில், “நீங்கள் வயதாகும்போது உங்கள் அனுபவங்களும் கூடுகின்றன. எதற்குச் சண்டையிட வேண்டும், எதற்குச் சண்டையிடக்கூடாது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
வயதானவர்களோடு நட்பு பாராட்டுவது முக்கியம். அம்மா, பாட்டி, தாத்தா மற்றும் வயதான உறவினர்களை இரவு உணவுக்கு அழைக்கலாம். அவர்களோடு வெளியில் செல்லலாம்.

அம்மா, பாட்டி அல்லது வயதானவர்களுடன் பழகுவது வேடிக்கையாக இருக்கும். ஆனால், வயதானவர்கள் புதிய நண்பர்களைப் பெற முனைகிறார்கள்.
இவர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவது அவர்கள் நீண்ட காலம் வாழ உதவுகிறது. மேலும் அது நமக்கும் பயனளிக்கிறது. அன்பானவர்களுடன் பேசுவதோடு மட்டுமல்லாமல் தோழமையாக இருப்பது அவர்களின் எமோஷனல் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
அவர்களின் அற்புதமான கதைகளைக் கேட்கிறோம். அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கிறோம். மேலும் அவர்களின் அன்பான புன்னகையையும், பெரிய அரவணைப்பையும் நாம் பகிர்ந்துகொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.