தும்மலை அடக்கியதால் அதிக அழுத்தத்தில் கிழிந்த சுவாசக்குழாய்; என்ன நடந்தது..?

Share

ஒருவர், தனக்கு சளியால் ஏற்பட்ட தும்மலைப் கட்டுப்படுத்தியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சுவாசக் குழாய் கிழிந்து சேதமடைந்த சம்பவம் மருத்துவ உலகை கவனிக்க வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவம் மருத்துவ வரலாற்றில் முதன்முறை என்றும் கூறப்படுகிறது.

தும்மல்

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த நபர் காரை ஓட்டிச் சென்றபோது திடீரென தும்மல் வந்துள்ளது. காரை ஓட்டிச் செல்வதால் தும்முவதற்கு சங்கடப்பட்ட அந்த நபர், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மூக்கை அழுத்தி வாயையும் இறுக்கமாக மூடியுள்ளார். ஆனால் அவரின் அந்தச் செயல் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்திவிட்டது.

கழுத்துப் பகுதியில் வீக்கம் மற்றும் வலியுடன் மருத்துவரிடம் சென்றார் அவர். மருத்துவர்கள், அவர் கழுத்தின் இருபுறத்திலும் வீக்கம் இருந்ததைக் கண்டனர். இருப்பினும் அந்த நபருக்கு மூச்சுவிடவோ, பேசவோ, விழுங்கவோ எந்தப் பிரச்னையும் இல்லை. கழுத்தின் வீக்கத்தை பரிசோதித்தபோது அந்தப் பகுதியில் மெல்லிய சத்தம் வருவதை கவனித்தனர்.

பரிசோதித்தபோது அவரது மூச்சுக்குழாய் சேதமடைந்திருந்தது தெரியவந்தது. காரில் செல்லும்போது அவர் தும்மலை அடக்கியதால் அளவுக்கு அதிகமான அழுத்தம் மூச்சுப்பாதையில் ஏற்பட்டு, இயல்பான வேகத்தைவிட 20 மடங்கு கடுமையான தும்மல் ஏற்பட்டுள்ளது. அந்த அழுத்தம் மூச்சுக்குழாயில் 2 க்கு 2 மில்லி மீட்டர் அளவுள்ள துளையை ஏற்படுத்தியது. அதாவது மூச்சுப்பாதை கிழிந்து சேதமடைந்துள்ளது.

இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை என்றும், ஆக்ஸிஜன் செல்வது உள்பட அவரது பிற முக்கிய இயக்கங்கள் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக இரண்டு நாள்களுக்கு அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்தும் மருத்துவர்கள் கண்காணித்தனர்.

தும்மல்

வலி நிவாரணம் மற்றும் அலர்ஜிக்கான மருந்துகள் அவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. இரண்டு வாரங்களுக்கு உடல் உழைப்பை அதிகமாகச் செலுத்தும் கடுமையான வேலைகளைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தினர் மருத்துவர்கள். ஐந்து வாரங்களுக்குப் பிறகு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகியிருந்தது.

இதுபோன்ற சம்பவம் மருத்துவ உலகில் மிகவும் அரிது என்றும், ஆவணப்படுத்தப்பட்ட முதல் சம்பவம் இது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பிரிட்டிஷ் மெடிக்கல் இதழில் வெளியாகியுள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com