கலெக்டர் அலுவலகத்தில், குறிப்பிட்ட வளாகத்தை அடையும் வரை வரதராஜன் தன் தற்போதைய விபரங்களை ஐஸ்வர்யாவிடம் சொல்லிக் கொண்டே வந்தார்.
ஆசிரியர் சங்கத்தில் ஒரு ஆபீஸ் பேரராக இருப்பதாகவும், ஆசிரியர் நலத் திட்டம் சார்ந்து ஒரு மனு தர வந்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
வளாகத்துக்குள் நுழைந்ததும், ஐஸ்வர்யாவின் அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட முன் வரிசைக்குப் போகுமாறு வழிகாட்டினார், சேவகர்.
வரதராஜனிடம், மனு கொடுப்பதற்கான, பதிவு எண் என்ன? என்று கேட்டு, அந்த எண் எழுதப்பட்ட நாற்காலியில் சென்று அமரவும் சொன்னார்.
“சார் என்கூட வரட்டும்..” – என்று இடைமறித்துக் கேட்டுக்கொண்டாள் ஐஸ்வர்யா..
அவர் பணிபுரியும் அந்தப் பத்திரிகையின் பெயரைக் கண்டதும், ‘நமக்கேன் வம்பு…” என்று என்று அனுமதித்து விட்டார். சேகவர்.
முன் வரிசையில் ஐஸ்வர்யாவின் அருகாமை நாற்காலியில் அமர்ந்தார் வரதராஜன்.
கலெக்டர் உள்ளே நுழைய, வரதராஜன் உட்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.
வரதராஜன் தன் அருகில் நிற்கும் ஐஸ்வர்யாவின் காதைக் கடித்தார். “கலெக்டர், என் ஸ்டூடண்ட்டாக்கும்.” – என்றார்.
ஐஸ்வர்யாவுக்குள் ஆயிரமாயிரம் வேதிவினைகள் ரசவாதம் நிகழ்ந்தன. “அப்டியா சார்…!”
நிகழ்ச்சியை இறை வணக்கம் தொடங்கும் முன், டவாலியிடம் என்னவோ சொல்லி அனுப்பினார் கலெக்டர். கலெக்டரின் பார்வை, வரதராஜன் மேல் விழுந்தது.
“இறை வணக்கம் முடிஞ்சவுடனே, உங்க டோக்கன் நம்பர் 12 ம் நம்பர் நாற்காலில, உங்களை ஒக்காரச் சொன்னாங்க கலெக்டரய்யா..! முதல் வரிசை பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்பப்பட்டிருக்காம்!” – என்று பணிவுடன் சொன்னார் டவாலி.
“இறைவணக்கத்துக்கு அப்பறமென்ன, இப்பவே அய்யாச் சொன்னபடி என் இடத்துக்கு போயிடறேன்…!” – என்று இடத்தை விட்டு நகர்ந்தார் வரதராஜன்.
நகர்ந்து கொண்டே, அவள் பக்கம் திரும்பி, “ஐஸ்வர்யா, மீட்டிங் முடிஞ்சதும் பிற்பாடு பேசுவோம், என் ஸ்டூடண்டாக்கும் கலெக்டர்! ; இருந்தாலும் அவர் இப்போ கலெக்டர். நான் மனு கொடுக்க வந்தவன். அவர் உத்தரவுக்குக் கட்டுப்படறதுதானே நம் கடமை..” – என்றபோது நெகிழ்ந்தாள் ஐஸ்வர்யா.
அதோடு நிறுத்தவில்லை. கலெக்டர் என் ஸ்டூடண்ட் மட்டுமில்லை. நான் பெற்ற ஒரே மகன் அவர்.”
இப்போது ஐஸ்வர்யாவின் தன்முனைப்புத் தவிடு பொடியானது.
இறை வணக்கம் தொடங்கியது.
புகைப்படம், மற்றும் வீடியோக் காட்சிகளோடு ‘முதல் நிகழ்ச்சி இறை வணக்கம் மேடம்’ என்று இணைத்து சனாவுக்குத் தகவல் அனுப்பினாள் ஐஸ்வர்யா.