வலி நிவாரணத்துக்காக எடுத்துக் கொள்ளப்படும் மெஃப்தால் (MEFTAL) மாத்திரைகள் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் மருத்துவர் அறிவுறுத்தல் இல்லாமல் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என இந்திய மருந்தியல் ஆணையம் (Indian Pharmacopoeia Commission – IPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. அலோபதி மருந்தான மெஃப்தால் மாத்திரை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, தசைப்பிடிப்பு, தசைகளில் வலி உள்ளிட்டவற்றுக்கு எடுத்துக்கொள்கின்றனர்.
இதுதவிர, மூட்டுவலி, பல்வலி, முடக்குவாதம் போன்ற பிரச்னைகளுக்கான வலி நிவாரணியாகவும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, சந்தைகளில் MEFTAL, MEFKIND, MEFANORM, IBUCLIN P போன்ற பெயர்களில் விற்பனையாகிறது. பொதுவாக அனைத்து மருந்தகங்களிலும் எளிதாகக் கிடைக்கும் என்பதால் மருத்துவர் பரிந்துரை இல்லாமலேயே இதை விற்கவும் வாங்கவும் செய்து வருகின்றனர்.