Doctor Vikatan: என் வயது 36. திருமணமாகி பல வருடங்கள் குழந்தையில்லை. பிறகு சிகிச்சை எடுத்து செயற்கை கருத்தரிப்பு முறையில்தான் குழந்தை பெற்றோம். இப்போது இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறோம். முதல் குழந்தையை செயற்கை கருத்தரிப்பு முறையில் பெற்றிருந்தால், அடுத்த குழந்தையையும் அப்படித்தான் பெற வேண்டுமா…. இதை விளக்கிச் சொல்ல முடியுமா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், எந்தெந்தக் காரணங்களால் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்னை வருகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் ஆண், பெண் என இருவர் சம்பந்தப்பட்ட காரணங்களும் இருக்கலாம். ஆண்களைப் பொறுத்தவரை விந்தணுக் குறைபாடுகள், அதாவது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம், அவற்றின் நகரும் தன்மையில் பிரச்னைகள் இருக்கலாம், அவற்றின் உருவத்தில் பிரச்னைகள் இருக்கலாம்.