மழை, வெள்ளத்துக்குப் பின்: மொட்டைமாடி, கழிவறை, கட்டடம், தெரு… பாதுகாப்புக்குச் செய்ய வேண்டியவை!

Share

மழை, வெள்ளம் ஓய்ந்தாலும் அதன் பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளன. வீட்டிலும், வீட்டுக்கு வெளியேவும் இப்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்…

சென்னை வெள்ளம்

* மொட்டை மாடியில், பார்க்கிங்கில், வீட்டுக்கு வெளியே திறந்த வெளியில் கிடக்கும் தேவையற்ற பொருள்களை அகற்றுங்கள். அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள், புழுக்கள் போன்றவை முட்டையிட்டு, பெருகி, நோயையும் பெருக்கும் அபாயமுண்டு.

* வீட்டில் `ஹோம் செப்பல்’ அணிந்துகொள்ளலாம். இதனால் தண்ணீரில், தரையின் ஈரப்பதம் பாதங்களில் ஏறாமல் இருக்கும்; சேற்றுப்புண், பித்தவெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கும். மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது ஷாக் அடிக்காமலும் தடுக்கும்.

சென்னை வெள்ளம்

* சாலைகள் இப்போதுதான் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வெளியில் செல்லும்போது கவனமாகப் பயணிக்கவும். சாலையின் ஓரத்தில் செல்லாமல் நடுவில் செல்வது பாதுகாப்பானது. அது, சாலையோர பள்ளங்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகள், திறந்து கிடக்கும் மேன்ஹோல்களிடம் இருந்து காக்கும்.

* வெளியில் சென்று வந்தவுடன் சூடான நீரில் குளித்து உடைமாற்றுவது மழைக்கால நோய்களிலிருந்து காக்கும்.

* வீட்டில் உள்ள அனைவருமே குடிநீரை காய்ச்சி வடிகட்டி அருந்துவது நல்லது. கூடுமானவரை சூடான நீரைப் பருகுவது சிறந்தது. அதேபோல், சமைத்த உணவுகளை சுடச்சுட உண்பது ஆரோக்கியத்துக்கும் நாக்கின் சுவை மொட்டுகளுக்கும் நல்லது. செரிமானத்துக்கு சற்றுக் கடினமான கீரை மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். சூடான கஞ்சி, காய்கறி சூப் போன்றவற்றை அதிகம் பருகலாம்.

வடபெரும்பாக்கம் | வெள்ளம்

* பயணங்களை, அந்த வழித்தடத்தில் போக்குவரத்து சீராகிவிட்டதா, வாகனங்கள் கிடைக்கின்றனவா, கிடைத்தாலும் நியாயமான கட்டணத்தில் உள்ளதா உள்ளிட்டவற்றை பரிசீலித்து முடிவெடுக்கவும்.

* கட்டடத்தின் மொட்டைமாடியில் மழைநீர் வடிகாலுக்காக வைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்பு இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளவும். ஏனென்றால், அதில் மரங்களிலிருந்து நிறைய காய்ந்த இலைகள் விழுந்து, அடைபட்டிருக்கும். அது நம் கவனத்துக்கு வராமல் போயிருக்க வாய்ப்புண்டு.

சென்னை வெள்ளம்

* வீட்டின் கழிவுநீர் மற்றும் மழைநீர்க் குழாய்களில் அடைப்பு இருக்கின்றனவா என ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக தண்ணீர் போவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.

* சொல்லப்போனால், மழை நேரத்தில் தண்ணீர் புகும் வீடுகளில், முதலில் அடைக்க வேண்டியது டாய்லெட்டை. இரண்டு மணல் மூட்டைகள் போட்டு அந்தத் துளையை அடைத்துவிட வேண்டும். தண்ணீர் வடிந்த பின்னர் முதலில் கவனம் கொடுக்கப்பட வேண்டியதும் அதுதான். அங்கிருந்து வீட்டுக்குள் கிருமிகள் பரவாமல் சுத்தம், சுகாதாரம் பேணவும்.

* மழை, வெள்ள பாதிப்பால் கட்டடத்தில் அதிகப்படியான ஈரப்பதம், பெரிய விரிசல்கள் இருக்கும் பட்சத்தில், பொறியாளரை அணுகி, சீரமைப்பு ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்ளவும்.

* மழைநீர் தேங்கும் பகுதிகளில், அருகிலுள்ள மின்சார இணைப்புப் பெட்டிகள் அபாயகரமாக இருக்கும்பட்சத்தில். வடியாத நீர்த்தேக்கம் குறித்து உடனடியாக அருகிலுள்ள மின்சார வாரிய அலுவலகத்திலும் தெரிவிக்கவும்.

ஈரோட்டில் கனமழை | வெள்ளம்

* தண்ணீர் ஓடும், தேங்கி நிற்கும் தெருக்களை கவனியுங்கள். குப்பைகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் அடைத்துக் கொண்டு தண்ணீர் செல்லாமல் நின்றுகொண்டிருக்கும். அதற்கு மாநகராட்சியில் இருந்து வரும்வரை காத்திருந்தால், அவர்கள் வருவதற்குள் தண்ணீர் தேக்கத்தால் பிரச்னைகள் பெருகலாம். எனவே, உங்கள் தெருக்களில் ஒரு குழு அமைத்து, அல்லது தெருவில் உள்ளவர்கள் சேர்ந்து பணியாளர்களை நியமித்து தெருவில் நிற்கும் தண்ணீரை அகற்ற சிறு சிறு முயற்சிகள் எடுக்கலாம். பெரிய அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் வந்து சரிசெய்வார்கள்.

மீள்வோம் விரைவாக!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com