உலகம் முழுவதும் கோவிட் தொற்று மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் நிலையில் அதன் வேரியன்ட்கள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இது குறித்து நேற்று பேசியுள்ள உலக சுகாதார மையத்தின் நிபுணர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், “உலகம் முழுவதும் கோவிட் வைரஸின் வேரியன்ட்கள் பரவி வருவதால், கோவிட் தொற்று அச்சுறுத்தலாகவே உள்ளது.

SARS CoV-2, இப்போது ஒவ்வொரு நாட்டிலும் பரவி வருகிறது, அது இன்னும் அச்சுறுத்தலாக உள்ளது. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏனெனில் இந்த வைரஸ் பரவுகிறது மற்றும் மாற்றமடைகிறது.
தற்போது XBB.1.5, XXB.1.16 மற்றும் EG.5 என மூன்று வகையான வேரியன்ட்கள் உள்ளன. ஆறு வேரியன்ட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றான BA.2.86 வேரியன்ட்டை மற்ற வேரியன்ட்களுடன் ஒப்பிடுகையில் அதன் தீவிரத்தன்மையில் பெரிய மாற்றத்தை நாங்கள் காணவில்லை.
ஆனால் உலகம் முழுவதும் இதன் நோயறிதல் மெதுவாகவும், நிலையானதாகவும் அதிகரிப்பதை நாங்கள் காண்கிறோம். கடுமையான நோய்த் தாக்குதலுக்குப் பிறகு இந்த வைரஸால் ஏற்படும் நீண்டகால விளைவுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை கொண்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போடுவது கோவிட் தொற்றுக்கு பிந்தைய நிலையின் ஆபத்தைக் குறைக்கிறது என்பதற்கான சான்றுகள் எங்களிடம் உள்ளன.
உலகம் முழுவதும் 13.5 பில்லியன் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்கள் ஒரே நேரத்தில் SARS-CoV-2 மற்றும் இன்ஃப்ளுயென்ஸாவால் பாதிக்கப்படலாம். எனவே இதற்கான தடுப்பூசிகளையும் போட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.