Doctor Vikatan: மருந்து, மாத்திரை உதவியின்றி மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மீள முடியாதா?

Share

என் வயது 34. எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. இதன் காரணமாக வெளியூர் பயணங்களைக்கூட தவிர்க்கிறேன். எப்போதாவது மலச்சிக்கல் தீவிரமாகும்போது மருந்து, மாத்திரைகள் எடுத்தால்தான் அதிலிருந்து மீள முடிகிறது. இந்தப் பிரச்னைக்கு வேறு எளிய தீர்வுகளே இல்லையா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ,  ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த்  டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன்

மலச்சிக்கல் பிரச்னை உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு இம்சை தருமானால், நீங்கள் மிக முக்கியமாக மூன்று விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். முதல் வேலையாக தினமும் தவறாமல் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி மிகவும் நல்லது. வேகமாக நடக்கும்போது குடலின் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்னையை குணப்படுத்தும் வழியைச் செய்யும்.

பலரும் நவீன வாழ்க்கையில் இந்தியன் டாய்லெட்டை தவிர்த்து வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகித்துப் பழகிவிட்டார்கள்.  எனவே மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தியன் டாய்லெட்டே சிறந்தது. தவிர அந்த பொசிஷனில் உட்கார்ந்தபடி பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வேறு வேலைகள் செய்வதெல்லாம்கூட மலச்சிக்கல் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். அதாவது ஸ்குவாட்டிங் பொசிஷன் என்று சொல்லக்கூடிய இந்த பொசிஷன், குடல்பகுதியின் அசைவுகளைத் தூண்டி, மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க உதவும்.

காய்கறிகள், பழங்கள்!

அடுத்தது நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கத்துக்கு மாறுவது. வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசி, வெள்ளை அவலுக்கு பதில் சிவப்பரிசி அவல், நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். உங்கள் சாப்பாட்டுத் தட்டில் ஒரு கப் சாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று கப் காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகளின் மூலம் மலச்சிக்கல் பிரச்னையிலிருந்து மிக எளிதாக வெளியே வரலாம்.

தினமும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.  போதிய அளவு தண்ணீர் குடிக்காததாலும் மலச்சிக்கல் பிரச்னை வரும். தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோவதுடன்,மலம் இறுகி வெளியேறுவதிலும் சிக்கல் உண்டாகும். தண்ணீர் மட்டுமன்றி, கிரீன் டீ, ரசம், சூப், இளநீர், நீர்மோர் போன்றவற்றையும் அதிகம் குடிக்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com